ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனமும் கண்ணதாசன் கழகமும் இணைந்து 12 -ம் ஆண்டாக கண்ணதாசன் விழாவினை நடத்தினர். ஜூன் 16 ஞாயிறன்று ஆர்.எஸ்.புரம் கிக்கானி மேல்நிலைப்பள்ளி சரோஜினி நடராஜ் கலையரங்கத்தில் மாலை 6.15 மணிக்கு இந்நிகழ்வு நடைபெற்றது.
இவ்விழாவில் எழுத்தாளர் சாரு நிவேதா மற்றும் பாடகர் ஜெயச்சந்திரனுக்கு கண்ணதாசன் விருது வழங்கப்பட்டது.
கண்ணதாசன் விருது கடந்த 2009 முதல் எழுத்தாளர்கள், பாடகர்கள், பாடலாசிரியர்கள், திரைக்கலைஞர்கள், பதிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.
இதற்கு முன் நாஞ்சில் நாடன், வண்ணதாசன், அசோகமித்திரன், ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன்,பிரபஞ்சன், சிற்பி, மாலன், கலாப்ரியா, அமுதோன் உள்ளிட்ட எழுத்தாளர்கள் விருது பெற்றுள்ளனர்.
மேலும் டி.ஆர்.எம். சாவித்திரி, சீர்காழி சிவசிதம்பரம், ராம முத்தையா, பதிப்பாளர் பி.ஆர்.சங்கரன், முத்துலிங்கம், வாணி ஜெயராம், பி.சுசீலா, பஞ்சு அருணாசலம், எல்.ஆர்.ஈஸ்வரி, எஸ்.பி.பாலசுப்ரமணியம் உள்ளிட்டோருக்கும் கண்ணதாசன் விருது வழங்கப்பட்டுள்ளது. விருது பெற்றவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் பரிசும், பாராட்டுப் பட்டயமும் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் சங்கரா கண் மருத்துவமனை நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் ஆர்.வி.ரமணி தலைமை தாங்கினார்.
எழுத்தாளர் மரபின் மைந்தன் முத்தைய்யா, இசைக்கவி ரமணன், எழுத்தாளர் அராத்து, நெல்லை லாலா ஸ்வீட்ஸ் மா ரியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். எழுத்தாளர் சாரு நிவேதிதா மற்றும் பாடகர் ஜெயச்சந்திரன் இருவருக்கும் ஆர்.வி.ரமணி விருது வழங்கினார்.
இவ்விழாவிற்கு தலைமை தாங்கி பேசிய ஆர்.வி.ரமணி, எங்கள் தலைமுறையின் மிகப்பெரும் ஆளுமை கவிஞர் கண்ணதாசன். அவரின் பாடல்கள் பள்ளிக் கல்லூரி காலங்களில் வாழ்க்கையுடன் கலந்தது.
மனிதர்களின் வாழ்க்கையில் அறிவும், அன்பும் மிகவும் முக்கியம். இரண்டில் ஒன்றில்லாமல் மனிதன் பூரண வாழ்வை அடைய முடியாது. கவிஞர் கண்ணதாசன் அன்பு, அறிவினால் பூரணத்துவத்தினைப் பெற்றவர். அவரின் நினைவுகள் இன்னும் பல தலைமுறைகளுக்கு இருக்கும் என்று பேசினார்.
விழாவில் ஏற்புரை வழங்கிய எழுத்தாளர் சாரு நிவேதிதா, ஒரு எழுத்தாளரின் படைப்புகளைக் குறித்து செவி வழியான விமர்சனங்கள் மூலமாக அறிந்து கொண்டு அவரின் படைப்புகளை படிக்காமலேயே ஒதுக்குவது கூடாது. எழுத்தாளரின் படைப்புகளை படிக்க வேண்டும்.
அதன் பின்னரே கருத்துக்களைக் கூற வேண்டும். எழுத்தாளர்கள் ஆண், பெண் போன்று தனி இனம். தனி உலகில் வாழ்பவர்கள். அவர்களை சமூகம் புரிந்து கொள்ள வேண்டும். பயணங்கள், அனுபவங்கள் மூலமாக இலக்கியம் படைப்பவர்கள். விருதுகளும், பரிசுகளும் அங்கீகாரம் கொடுத்து ஊக்கம் கொடுப்பவை என்றார்.
அடுத்து பேசிய பாடகர் ஜெயச்சந்திரன், ‘கண்ணதாசன் பெயரால் வழங்கப்படும் விருது எனக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
அவருடனும், எம்.எஸ்.விஸ்வநாதனும் அவர்களுடனும் பணியாற்றியது எனக்கு பெருமை மிகுந்த தருணங்கள் என்றும் விருது வழங்கியமைக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.
விழாவில் மரபின் மைந்தன் முத்தையாவின் தைப்பாவை குறுந்தகடுற்ற வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் எழுத்தாளர்கள், இலக்கிய வாசகர்கள், கண்ணதாசன் ரசிகர்கள், பொதுமக்கள என ஆயிரக் கணக்கான மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.