ஈழ எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய நடுகல் நாவல் வெளியாகி கிட்டத்தட்ட ஓராண்டு ஆகின்றது. உலகம் எங்கும் கவனம் பெற்று வரும் இந்த நாவல் குறித்து தொடர்ச்சியாக விமர்சனங்களும் இரசனைக் குறிப்புக்களும் எழுதப்பட்டு வருவது குறிப்பிடத்தக்க அம்சமாகும். ஈழ விடுதலைப் போராட்ட பின்னணியில் கிளிநொச்சியை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் குறித்த இந்த நாவல் இளையவர்களாலும் மக்களாலும் சிலாகிக்கப்படும் பிரதியாகவும் தனித்துவம் பெறுகின்றது. தமிழ் இலக்கிய மரபுக்கு மிகவும் நெருக்கமான தமிழக எழுத்தாளர் வெளி ரங்கராஜன் எழுதிய இவ் விமர்சனத்தை வணக்கம் லண்டன் வெளியிடுவதில் மகிழ்ச்சி கொள்கின்றது. -ஆசிரியர் (இலக்கியச் சாரல்)
தமிழ் ஈழப்போரின் பின்புலத்தை மையமாக வைத்து போராளிகள்,போராட்டத்துக்கு வெளியே இருந்து உறவுகளை இழந்த குடும்பங்கள்,போரில் நேரிடையாக பாதிக்கப்பட்டு இருப்பிடங்களையும், வாழ்வாதாரங்களையும் இழந்து அலைக்கழிக்கப்பட்ட மக்கள் என இம்மூன்று தரப்பு உணர்வுகளையும் கடந்த காலமும், நிகழ்காலமும் கலைத்துப் போடப்பட்ட ஒரு கொலாஜ் பாணியில் முன்னிறுத்தி எதிகாலத்துக்கான உறுதிப் பாடுகளை கட்டமைக்க விழைகிறது இந்த நாவல்.2009ம் ஆண்டு இறுதிகட்டப்போரின் தோல்விகளுக்குப் பிறகு தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைப்பாடுகள் மற்றும் பங்களிப்புகள் குறித்து நேர்மறையானதும், எதிர்மறையானதுமான பல புனைவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் ஒரு சூழலில் தீபச்செல்வனின் இப்படைப்பு ஒரு இழக்கப்பட்ட காலத்தின் நினைவோட்டங்களின் பின்புலத்தில் நிகழ்கால யதார்த்தங்கள் குறித்த பரிசீலனைகளை முன்வைத்துச் செல்கிறது.
வேறுபட்ட இத்தரப்பு பார்வைகளின் நம்பகத்தன்மைகளை அச்சூழலின் பின்புலத்தில் உள்ளவர்களே தீர்மானமாக கணிக்க முடியும் என்றாலும் ஒரு செறிவான இலக்கியப் படைப்பு தனக்குரிய வகையில் சூழல் யதார்த்தம் குறித்த அனுமானங்களை முன்வைக்கத் தவறுவதில்லை.அவ்வகையில் இந்த நாவல் போரினால் வாழ்வையும், நினைவுத் தடங்களையும் இழந்த ஒரு சமூகத்தின் கூக்குரலை நிதர்சனமாகப் பதிவு செய்து எஞ்சியுள்ள அடையாளங்கள் மற்றும் சிதைவுகளின் வழியாக வரலாற்று நினைவுகள் மீட்கப்படும் பல்வேறு சாத்தியங்களை முன்வைக்கிறது.
அந்த முயற்சியில் நடுகற்கள்,புகைப்படங்கள், மரணித்தவர்களின் நினைவிடங்கள் ஆகியவை கடந்த காலத்துக்கும் நிகழ்காலத்துக்குமான உறவுநிலைகளை உயிரோட்டமாக மீட்பு செய்தபடி உள்ளன. கல்லறைகள் உடைப்பு, நினைவுச் சின்னங்கள் அழிப்பு,காடுகள் அழிப்பு,இயற்கை அழிப்பு,நிலங்கள் பறிப்பு என இலங்கை ராணுவத்தின் தமிழ் இன வெறுப்பும், வெறியும் எங்கும் காணக் கிடைக்கின்றன. வீடற்ற வாழ்க்கையும்,கூரையற்ற வீடுமாக முகாம்களில் நீளும் வாழ்நிலைகளின் அவலங்கள் நிதர்சனமாக யதார்த்தத்தை பறைசாற்றியபடி உள்ளன. காலமே ஒரு குறியீடாக இழந்த நினைவு, இழந்த வாழ்க்கை,
இழந்த வரலாறு என எஞ்சியவைகளை பற்றிச்சென்றபடி நம்பிக்கைக்கும், நம்பிக்கையின்மைக்கும் இடையே ஊசலாடியபடி உள்ளது.
குடும்பமும்,சமூகமும் மீளமுடியாது தன்னுடைய நினைவுத் தடங்களை இழந்திருந்தாலும் நடுகற்கள் மீண்டும் மீண்டும் இழப்பின் துயரங்களை கிளர்ந்தெழச் செய்தபடி உள்ளன.
பின்னுரையில் பிரேம் குறிப்பிடுவதுபோல இங்கு நடுகல் என்பது மீண்டும் நிகழக்கூடாத ஆனால் எதிர்காலத்தை நடத்திச்செல்லும் ஒரு அரசியல் குறியீடாக உள்ளது. நினைவுகளே ஆயுதங்கள் ஆக,ஆனால் ஆயுதங்கள் அற்ற, போர்கள் அற்ற மாற்றுப் போராட்டம் முன்நின்றபடி உள்ளது.சுயசரிதைத்தன்மையும்,நிகழ்காலமும்
கலைத்துப் போடப்பட்ட ஒரு தொனி நாவலுக்கு கூடுதலான நம்பகத்தன்மையை அளிப்பதாக உள்ளது.சில சிறுகதையாடல்களின் தொகுப்பாக இதன் அபுனைவுத்தன்மை கூட புனைவின் சாத்தியங்களை அதிகப்படுத்திச் செல்கிறது. இன்றைய பின்நவீன காலகட்டத்தில் புனைவுக்கும், அபுனைவுக்குமான இடைவெளிகள் குறுக்கப்பட்ட நிலையில் நாவல் குறித்த வரையறைகள் மாறியபடி உள்ளன.
இலங்கை ராணுவம் தன்னுடைய போர்க்குற்றங்களுக்காகவும்,மனித உரிமை மீறல்களுக்காகவும் எந்தவிதமான வருத்தமோ, விசாரணையோ இல்லாமல் தமிழ்ப்பகுதிகளில் தொடர்ந்து ஆக்ரமிப்புகளை நிகழ்த்திவரும் நிலையில் தமிழ் இனத்தின் வாழ்வுரிமைக்குரல்கள் உலக அரங்கில் உரத்து ஒலிக்கவேண்டிய தேவை உள்ளது. நினைவு மீட்பு,வரலாறுமீட்பு ஆகிய பின்புலத்தில் நாவல் அதற்கான ஒரு இலக்கியக் குரலை முன்னெடுக்கிறது. இந்த சந்தர்ப்பத்தில் உலக அரங்கில் நாவல் பெற்றுவரும் கவனமும், நாவல் குறித்து எழுப்பப்படும் கேள்விகளும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்தவை.
– வெளிரங்கராஜன். விமர்சகர் தமிழகத்தின் குறிப்பிடக்க எழுத்தாளர் மற்றும் நாடகத்துறை கலைஞர்.