செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் சண்முகம் சபேசனின் கனவு நனவாகிறது! | முருகபூபதி

சண்முகம் சபேசனின் கனவு நனவாகிறது! | முருகபூபதி

3 minutes read

இலங்கை வடபுலத்தில் யாழ்ப்பாணம், நீராவியடியில் 1954 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 06 ஆம் திகதி சண்முகம் – பர்வதலக்ஷ்மி தம்பதியரின் மூத்த புதல்வனாகப் பிறந்த சபேசன், கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி ஆஸ்திரேலியா மெல்பனில் மறைந்தார்.

யாழ். இந்துக்கல்லூரியின் முன்னாள் மாணவரான அவர், 1989 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் மெல்பனுக்கு புலம்பெயர்ந்து வந்தபின்னர், விக்ரோரியா  ஈழத்தமிழ்ச்சங்கம், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழர் புனர்வாழ்வுக்கழகம் முதலானவற்றில் அங்கம் வகித்தவாறு, மெல்பன் 3 C R தமிழ்க்குரல் வானொலியில் கால் நூற்றாண்டு காலம் ஊடகவியலாளராகவும் எழுத்தாளராகவும் இயங்கிய  தமிழ்த் தேசிய பற்றாளர்.

3 C R தமிழ்க்குரல் வானொலியில் தங்கு தடையின்றி, வாரம்தோறும் அரசியல் விமர்சன கட்டுரைகளை எழுதி தனது குரலிலேயே ஒலிபரப்பினார்.

அவ்வாறு எழுதப்பட்ட கட்டுரைகளை தொகுத்து நூலாக்கவேண்டும் என்ற எண்ணத்திலேயே காலத்தை கடத்திவிட்டு, எதிர்பாராமல் உடல்நலம் பதிப்புற்று மறைந்துவிட்டார்.

தனது நூல் வெளியிடும் எண்ணத்தை 2009 ஆண்டிற்கு முன்னர் தான்  ஆழமாக நேசித்த தமிழ்த்தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடத்திலும் கூறியபோது, நூலைத் தொகுத்து அச்சிடும் வேலையை தாமதிக்காமல் பாரும், அந்த நூலை நானே வெளியிட்டு வைக்கின்றேன் என்றும் அவர் இவருக்கு கூறியிருந்தார்.  எனினும் சபேசனின் அந்தக் கனவு அப்போது நனவாகவில்லை. அந்த நூல் வெளியீடு மட்டுமல்ல இதர கனவுகளும் நனவாகாமல் திடீரென  அற்பாயுளில் அவர் மறைந்தது தீராத சோகம்தான்.

சபேசன் வாழ்ந்த காலத்தில்,  அவர் சார்ந்து நின்று அர்ப்பணிப்போடு இயங்கிய அமைப்புகள், மற்றும் அவற்றோடு இணைந்திருந்தவர்கள், மற்றும் வன்னி பெரு நிலப்பரப்பில் அவர் உளமாற நேசித்த மக்கள், தமிழ்நாட்டில் அவர் நெருங்கிப்பழகிய பல தமிழ்த்தேசிய உணர்வாளர்கள், மற்றும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் என பெருந்தொகையானோரைக்கொண்ட வாசகர்களையும் வானொலி நேயர்களையும் பெற்றிருந்தவர்.

எனினும் இத்தகு ஆளணிப்பலமிருந்தும் அவரால் தனது கனவை நனவாக்கமுடியாமல் போனது துர்ப்பாக்கியமே !

இவ்வாறு வசதி வாய்ப்புகள் இருந்தும் தங்கள் படைப்புகளை தொகுத்து நூல் வடிவில் வெளியிடமுடியாமல்போன தமிழ் எழுத்தாளர்கள் எமது சமூகத்தில் முன்னரும் இருந்திருக்கிறார்கள்.

இலங்கையில் முப்பது ஆண்டு காலமாக நீடித்திருந்த போர் 2009 ஆம் ஆண்டு மேமாதம் முடிவுக்கு வந்தபோது, நேர்ந்த உயிரிழப்புகளினாலும், ஆழ்ந்த நேசத்திற்குரிய அவரது தமிழ்த்தேசியத்தலைவர் குறித்து வெளியான செய்திகளை ஜீரணிக்கமுடியாமலும் பெரிதும் கலங்கி, மனவுளைச்சலுக்கும் ஆளாகியிருந்தவர் சபேசன்.

“ மாற்றம் வரும் என எதிர்பார்த்தேன், ஏமாற்றம்தான் மிஞ்சியது, எஞ்சியது “ என்று மறைவுக்கு முன்னர் சொல்லிக்கொண்டிருந்தார் என்பதை, அவரது மறைவுக்குப்பின்னர் வெளியாகும், காற்றில் தவழ்ந்த சிந்தனைகள் நூலில் அவரது மனைவி திருமதி சிவமலர் சபேசன் பதிவுசெய்துள்ளார்.

இந்நூலை இம்மாதம்  19 ஆம் திகதி  சனிக்கிழமை  மெல்பனில்                    Glen Waverley Community Centre   மண்டபத்தில் வெளியிட்டு வைக்கிறார்.

சபேசனின்  நெருங்கிய உறவினர் திரு. நடராஜா கனகசபை அவர்களின் தலைமையில்  இம்மண்டபத்தில் மாலை 4-00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்நிகழ்வில் சபேசனின் உருவப்படத்திற்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்படும்.

சபேசனின் புதல்வி செல்வி நங்கை சபேசனும் தந்தையார் பற்றிய நினைவுரையை நிகழ்த்துவார்.

சபேசனின் நீண்ட கால நண்பரும் தமிழக அரசியல் பிரமுகரும் திராவிடர் இயக்கத் தமிழர்பேரவையின் நிறுவனருமான பேராசிரியர் சுப. வீரபாண்டியனின் அணிந்துரையுடன் இந்த நூல் வெளியாகிறது.

இந்நூலுக்கான முகப்பினை வடிவமைத்தவர் தமிழகத்தைச்சேர்ந்த ஓவியர் ஆர். சரவணா அபிராமன். அச்சுப்பதிப்பு தமிழ்நாடு சுதர்சன் புக்ஸ்.

சபேசனின்  நூல் வெளியீட்டு நினைவரங்கில், திருவாளர்கள் ஆரூரண் ரவீந்திரன், விவேகானந்தன்,  ஶ்ரீநந்தகுமார், எழுத்தாளர்கள் பாடும்மீன் ஶ்ரீகந்தராசா, முருகபூபதி ஆகியோர் உரையாற்றுவர்.

                          —0—

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More