தஞ்சை
வயலுக்குப் போனவர்கள்
வீடு திரும்பும்வரை
திக்திக்கென்று
அடித்துக்கொள்கிறது மனசு
எழவு விழுந்தாலும்
எடுத்துப் போட வழியில்லை
எல்லோரும் பசியாற
படி அளந்த நன்னிலம்
கிழிந்த பையோடு
வரிசையில் நிற்கிறது
இலவச அரிசிக்கு.
வீடு பெருக்குகிறவள்
நகருங்கள் என்பதற்குள்
எழுந்துகொள்ள
மனம்வராத நீதான்
கோஷம் போட்டுக்
கொடி தூக்குகிறாய்
பெண் விடுதலைக்கு.
சோகை பிடித்தாலும் பரவாயில்லை
குழந்தைகளைத் திட்டாதே
மண்ணள்ளித் தின்னட்டும்
சொரணை வர.
கருக்கரிவாள் எனது பேனா
கருத்துகள் சிவப்பைச் சிந்தும்
செருக்குகளை வீழ்த்தும் சுத்தி
சிந்தனையில் முளைக்கும் வெள்ளி
படிந்துவிட்ட ஆதிக்கத்தின்
பாசாங்கை வெட்டும் கத்தி
மூக்குச்சளி ஒழுகும் பிள்ளை
முகந்துடைக்க உதவும் துண்டு
சாக்காட்டை அள்ளி உண்ணும்
சாப்பாட்டு மேஜை; கவலை
வேக்காளம் தீரும் மட்டும்
வீசுகின்ற கலகக் காற்று
பலியாடாய்ப் போன தமிழின்
பண்பாட்டை மீட்கும் ஓசை….
யுகபாரதி