மரத்தின் கால் நீரற்றநிலம் பிடித்திருக்கிறது,
கூச்சலின்றி அது ஓடத்தொடங்கினால்
பள்ளிக்கூடத்தின் வாசலை வெயில் நிரப்பிவிடும்,
அங்கு குவிந்திருக்கும்
நவ்வாப்பழங்கள் ஒளியில் துலங்கும்
கிழவிக்கு கண் கூசும்.
பிச்சை
சன்யாசிக்கு
நிம்மதி போய்
விடும்,
சிலர் புழுக்கத்தில் பொறுமை இழப்பர்.
தபால் பெட்டி
கக்கிவிடும்
கடிதங்களைப் பற்றி பரவாயில்லை
புகார் மனுக்கள்
அம்பலப்படும்,
ஓடும் மரத்தின் தலையில்
பறவைகள் வட்டமடித்து பறக்கும்
அதன்
முட்டைகள் தவறி
பாதி
ரெக்கையோடு
இயலாது விழுவது ஏற்புடையதன்று.
பெயர் தெரியாத செடிகள்
புல்
பூக்கள் உதிர்த்த
தக்காளி செடி
புரியாமல் பின்னே ஓடத்தொடங்கினால் என்செய்வது?
வேருக்கு ஊற்றும் போதே
பூமியின் வயிற்றுக்கும் போய் சேரும்படியும்
துளையிட்டெடுத்தமைக்கு மனதில்
வருந்தியபடி
நீரே ஊற்றி நெடுஞ்சாண்கிடையாக விழுதல் தப்பில்லை.
பிடி பிடி இருக்கி பிடி…விட்ராத சாமி
ஏ பூமி..
கால் தூக்க பாக்குது சாமி
ஒத்த மரம்
இன்னும் பலமாக
கத்திப்பாடு
பாடு…
அது கேக்கும் காலம்
வந்துவிட்டது.
சீனு ராமசாமி
(அண்ணன்
வண்ணதாசன் அவர்களுக்கு )