கனவுகள் இடையறாது தின்கின்றன
காலமும் வெளியும்
உருகிக் கொண்டிருக்கின்றன
அடர் நிசப்தம் அமைதியில்லை
கடும் விஷமாய் வலி ஏறுகிறது
கண்ணீர் திரளுகிறது
வெடிபடும் வழி தான் புலப்படவில்லை.
மெளனத்துள் கரைய விரும்பினால்
கொந்தளிப்பு சூழலுள் பீறிட்டது
ஏகாந்தம் உடைபட
எதிர் வீட்டு நாயின் குரைப்பொலி
தூர ஒலிபெருக்கியின்
மந்திர உச்சரிப்பொலி
மழை வராமல்
ஒரே காற்றின் இரைச்சல்
மன வேதனை
உடல் நீயின்றி வேக
உயிரின் கொதியாட்டம்
விழிகளில் நீராய் வழிகிறது
நாடோடியாய் திரிவது சுதந்திரமல்ல
பறவையாய் பாவனை கொள்வது….
தீராத உளைச்சல்களிருந்து மனம்
விடுபடுவது எக்காலம்?
உடைந்த படகு
தடயங்கள் எதுவுமில்லை
அலைகள் தொட்டுப் போகின்றன
குளம்படிச் சத்தம்
கேட்டுக் கொண்டேயிருக்கிறது
மனதுள் தேடிப் பார்க்கிறேன
காற்று வருகிறது
காற்று போகிறது
இலைகள் நடுங்குகின்றன
வானத்தில் பறவைகள்
அலைகின்றன உயிரைத் தேடி
இசைத்த காலங்கள் முடிந்து போயின
கோஷிக்கத் தருணம் உதிக்கிறது
சூடு பரவும் போது இதயங்களின் போர்வைகளை விலக்குங்கள்.
🦀
வசந்ததீபன்