செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் இன்சுவையாம் தமிழ் | செ.சுதர்சன்

இன்சுவையாம் தமிழ் | செ.சுதர்சன்

2 minutes read
01.
ஈழ நிலந்தனில் இன்பத் தமிழ்மொழி
இனிதென வாழியவே!
இங்குள்ள வானத்தின் வெளிமிசை எங்கணும்
தமிழிசை ஓங்குகவே!
சூழிடர் போக்கியும் சுடரொளி ஏற்றியும்
சுவை தந்து வாழியவே!
சுந்தரமாம் எங்கள் சுவைத்தமிழ் ஆருயிர்ச்
சுடர் என்றும் வாழியவே! – தமிழ்ச்
சுடர் என்றும் வாழியவே!
02.
ஐம்பெருங் காப்பியம் அணியெனப் பூண்ட எம்
அன்னைத் தமிழ்மொழியே!
ஐயனும் ஒளவையும் அருங்கவி வாணரும்
அணிந்திடும் தவ மொழியே! – தமிழ்
ஆய்ந்திடும் உயர் மொழியே!
சங்கிலியும் சமர்வென்றிடு வேந்தரும்
சாற்றிய தமிழ்மொழியே!
சாந்தமெனத்திகழ் யோகரும் தாயெனத் தாங்கிய தனிமொழியே! – முனி
தழுவிய தமிழ்மொழியே!
03.
ஈசனின் அன்பரும் இன்பிறை நேசரும்
இன்புறும் தமிழ்மொழியே!
ஈழ நிலம்மிசைச் சிங்கள மாந்தரும்
இயம்பிடும் இன்மொழியே! – இசை வீந்திடும் எம்மொழியே!
நாவலரும் பல பாவலரும் தொழு
தேத்திய நனிமொழியே!
காவலெனத் தினம் களம்புரி வீரரும்
காவிய தமிழ்மொழியே! – எம்
காவியத் தனிமொழியே!
04.
மாம்பழத் தீவென மலிகடல் சூழ்ந்த எம்
மாமணி நாட்டினிலே!
நாமெலாம் நன்குவோர் அன்னையின் பிள்ளையாம்
சாதனை புரிந்திடுவாய்! – தாயே
சாதனை புரிந்திடுவாய்!
தீயினிலே விழும் போதினிலும் தமிழ்
வாழ்க என்றே உரைப்போம்!
திகழ் வாழ்வினிலே எங்கள் வாயில் எந்நேரமும்
வெல்க என்றே உரைப்போம்! – தமிழ் வெல்க என்றே உரைப்போம்!
05.
இன்னுயிராம் எங்கள் இன்சுவையாம் தமிழ்
இங்கென்றும் வாழியவே!
ஈழ நிலந்தனில் இன்பத் தமிழ்மொழி
இசைவுற வாழியவே! – தமிழ்
இனிதுற வாழியவே!
செ.சுதர்சன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More