குடியிருக்க ஒரு குட்டி வீடு
குடிசையானாலும் கட்டுவது பெரும் பாடு
வீடில்லாது வீதியிலே வாழ்ந்து
வீதியிலே மரணிக்கும் மக்களுக்கு மத்தியில்
குடிசை வீடே போதுமடா சாமி.!
வசந்த மாளிகை கட்டி முடிக்க
வாங்காத வட்டிக் கடனில்லை
வங்கியில் வைக்காத நகையுமில்லை
கட்டி முடித்த பின் கொள்ளாத பெருமையில்லை
கொண்ட நிம்மதிக்கோ அளவேயில்லை.!
ஒவ்வொரு கூரையிலும் எங்கள்
வேர்வையின் ஈரம் இருக்குமே
கூரையை பிண்ணியது நார்களை கொண்டா?
எங்கள் நரம்புகளை கொண்டு தான்
எம் குருதியின் சுருதி குடிசையில் கேட்குமே.!
சாமத்திலே கூரைமேல் பூனைகள் விளையாட்டு
மற்ற நேரத்திலே சிட்டுக்குருவிகள் இசைப்பாட்டு
எல்லா நேரத்திலும் எலிகளின் தொல்லைக் கூத்து
மாலைநேரமோ காக்கைகளின் பட்டிமன்றப் பேச்சு
மங்கிய இருட்டில் குத்து விளக்கின் ஒளிவீச்சு.!
தென்றல் காற்றில் கீற்றும் கீதம் பாடும்
வேகம் கூட்டினால் கூரை வாய் பிளக்கும்
பலத்த காற்றுக்கோ குடிசையே பறக்கும்
வானம் எங்கள் வீட்டின் கூரையாகும்
நிலவும் சூரியனும் விளக்காய் ஒளிரும்.!
சின்னச் சின்ன ஓட்டைகளில் நட்சத்திரம் தெரியும்
சின்ன கயிறு பூட்டே எங்கள் வீடு அறியும்
சோற்றுப் பானை தினமும் நிறைவதில்லை
வறுமையிலும் மகிழ்ச்சிக்கு வறுமையில்லை
வருடாவருடம் வீடு புதுப்பிக்க பணமுமில்லை.!
அக்கினி நட்சத்திரத்திலும் குளுமை கொடுக்கும்
அந்தப்புர சுகமும் குடிசை சுகத்தில் தோற்க்கும்
குடிசையில் தூங்கிப் பார்க்க சொர்க்கம் தெரியும்
பட்டினியில் தரையில்படுத்தாலும் தூக்கம் வரும்
மாடிவீட்டு பஞ்சணை தருமா நிம்மதியின் தூக்கம்!
– அலிநகர் அஹமது அலி
நன்றி : எழுத்து.காம்