ஏ – நைன் வீதியிலே ஒரு
மட்பாண்டத் தொழிற்சாலை
மட்பாண்டப் பாவனை உயர
குடிசைத் தொழிலாளி உயர்வான்
ஒட்டுசுட்டான் மண் எடுத்து
தண்ணீர் ஊற்றிக் குழைத்து
பார்த்துப் பார்த்து வனைந்தது
இந்தப் பானை
சோறு காய்ச்சப் பானை
கறி வைக்கும் சட்டிகள்
மூடி வைக்க ஒரு மூடி
சுவையான சாப்பாடு
அம்மா குழைத்துத் தந்த சோறு
கூடி இருந்து உண்டது ஒரு காலம்
சட்டியில் குழைத்த அந்தச் சுவை
நினைச்சு ஏங்கும் இந்த மனசு
அலுமினியம் கண்டான்
மட்பாண்டம் மறந்தான்
அலுமினியத்தால் தொழிலதிபர்
மேலும் மேலும் செல்வரானார்
மட்பாண்டம் நாம் மறக்க
ஏழை சோற்றுக்கு ஏங்க
மட்பாண்டம் மறந்த தமிழன்
மரபுத் திங்கள் கொண்டாட்டம்
பானையில் நீரூற்றி வைத்த சோறு
மறு நாள் பழஞ்சோறாக மாறும்
சோற்றில் இல்லாத சத்து
பழஞ்சோற்றில் நிறைந்திருக்கும்
நீள வாய் வைத்த சாடி
நீரை இதமாகக் குளிர வைக்கும்
அழகாய் வனைந்த மண்சாடி
உப்புப் புளி வைக்க உகந்தது
பாடுபட்டு வனைந்த மட்பாண்டம்
விலைப் படாமல் கிடக்குது ஏராளம்
வாங்க யாரும் வாராரோ என்று
காத்திருக்கும் தொழிலாளர் குடும்பம்
பொங்கலுக்குக் கடையெல்லாம் அலுமினியம்
அடுக்கடுக்காய் உள் பக்க மேசையிலே
மண் பானைகள் எல்லாம்
தாழ்வார ஓரத்திலே
தமிழர் நாம் பண்பாட்டை மறக்கலாமோ
மரபுத் திங்கள் கொண்டாட்டம் நன்று
மட்பாண்டம் வாங்க ஒரு அமைப்பு
பெரும் அளவில் தொடங்க வேண்டும்
– பத்மநாபன் மகாலிங்கம்