ஆதி மனிதன் தனது பசிக்கு தேவையான உணவை தேடிப் பறித்தும், வேட்டையாடியும் உண்டான். நோய்களுக்கு உணவை மருந்தாக கொடுக்கும் நம் கலாச்சாரத்திற்கு முன் மனிதர்களை இரண்டு பிரிவாக பிரித்தனர். ஒன்று உட்கார்ந்த இடத்தில் மூளைக்கு வேளை கொடுக்கும் மந்திரிகள், கணக்கு வழக்கு பார்க்கும் நபர்கள். உடல் உழைப்பு அதிகம் தேவைப்படாத உட்கார்ந்த இடத்தில் வேலை பார்த்த இவர்கள் அந்த காலத்தில் சைவ உணவு வகைகளை மட்டுமே உண்டனர்.
இரண்டாவது போருக்கு செல்லும் நபர்கள். எதிர்நாட்டினருடன் போர் செய்து தாய் நாட்டை காக்கும் பணியை கொண்ட இவர்கள் உடல் உழைப்பு அதிகம் தேவைப்பட்டதால் அவர்களுடைய உணவு வகைகளில் அசைவம் கலந்திருந்தன. அதிலும் அசைவம் உடலில் எந்த ஒரு நோயையும் ஏற்படுத்திவிடக் கூடாது என்தற்காக அசைவ உணவு சமைக்கும் போது அத்துடன் இஞ்சி, பூண்டு, வெங்காயம் போன்ற மூலிகை தன்மை கொண்ட உணவு வகைகளையும் சேர்த்துக் கொண்டனர்.
ஆனால், தற்போதைய வாழ்க்கை முறையில் அவ்வாறு இல்லை. உடல் உழைப்பு உள்ளவர்கள், உடல் உழைப்பு இல்லாதவர்கள் என எல்லோருமே விரும்பியதை விரும்பும் நேரங்களில் விரும்பிய வகைகளில் உண்டு வருகின்றனர். இந்த முறையற்ற உணவு பழக்க வழக்க முறைகளால் ஒவ்வொருவரும் விதவிதமான உடல்வாகு மற்றும் நோய்களை சந்தித்து வருகின்றனர். இதில் முக்கியமானது கொழுப்பு பிரச்சினை. மனித உடலுக்கு மிகத்தேவையான சத்து கொழுப்பு சத்தாகும். ஆனால், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல அளவுக்கு அதிகமாக கொழுப்பு சேரும் போதுதான் இந்த பிரச்சினையே தலைதூக்குகிறது. ஹோட்டல் உணவு பழக்கம், உடற்பயிற்சி செய்யாமை, சிகரெட் பிடிக்கும் பழக்கம், கொழுப்பு நிறைந்த உணவுகளை அன்றாடம் சாப்பிடுவது போன்றவை அதிகப்படியான கொழுப்புகளை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக உடலின் மெட்டபாலிசம் பாதிக்கப்பட்டு உடல் பருமன், வயிறு, இடுப்பை சுற்றி கொழுப்புகள் தேங்கி பானை போன்ற தொப்பை உண்டாகிறது. இதோடு சேர்த்து பலவிதமான நோய்களும் இலவச இணைப்பாக தொற்றிக்கொள்கிறது.
விதை இல்லாத பேரீச்சம் பழம் ஐந்து, இஞ்சி சாறு இரண்டு டீ ஸ்பூன் எடுத்து மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு பேஸ்ட் போன்று அரைத்துக் கொள்ள வேண்டும். பேரீச்சம் பழத்தில் உள்ள நார் சத்து இரத்த குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தும் கொழுப்புகளை கரைத்து விடும். இஞ்சியில் உள்ள அமிலம் உடலில் தேங்கும் அதிகப்படியான கொழுப்பை கரைத்து விடும். தினமும் இரவில் உணவு உட்கொண்ட பிறகு இந்த கலவையை சாப்பிட்டு வந்தால் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு முழுமையாக கரைந்து விடும்.
தக்காளி ஐந்து, பூண்டு ஐந்து பற்கள், எலுமிச்சை சாறு ஆறு டீ ஸ்பூன் என எடுத்து அரை லிட்டர் தண்ணீருடன் சிறிது ஐஸ் கட்டி போட்டு மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். தக்காளி சரும செல்களுக்கு புத்துயிர் அளிப்பதுடன் உடலில் அதிகப்படியாக சேரும் கொழுப்பை கரைத்து உடல் எடை கூடாமல் பாதுகாக்க உதவும். இந்த பானத்தை தினமும் காலை உணவு உட்கொண்ட பிறகு ஒரு மணி நேரம் கழித்து குடிக்க வேண்டும். கறிவேப்பிலை உணவில் மணம் தருவது மட்டுமல்ல, உடலில் தேங்கியுள்ள கொழுப்புகளை கரைக்கவும் உதவும். தினமும் அதிகாலையில் சிறிது கறிவேப்பிலையை வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால், செரிமானத்தை மேம்படுத்தி கொழுப்பை குறைக்கும். சோம்பு இரண்டு டீ ஸ்பூன் அளவில் எடுத்து இரவில் நீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் அந்த நீரைப் பருக வேண்டும்.
வெந்தயத்தில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் இரவில் ஒரு டீ ஸ்பூன் அளவில் எடுத்து நீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் வெதுவெதுப்பாக சூடாக்கி பருக வேண்டும். திரிபலா என்பது மூன்று மூலிகைகள் கலந்த ஒரு கலவை. உடல் சுத்தம், புத்துணர்ச்சி, உடல் ஆரோக்கியம் ஆகியவற்றிற்கு சிறந்தது. தினமும் ஒரு டீ ஸ்பூன் அளவு திரிபலா பொடியை சுடுநீரில் போட்டு தேன் கலந்து பருகி வந்தால் உடல் எடை குறையும். பூண்டு வளர் சிதை மாற்றத்தை அதிகரிக்க செய்து கல்லீரல் மற்றும் இரத்தத்தில் தங்கும் கொழுப்புகளை கரைக்கும். எலுமிச்சை, ஆரஞ்சு, வெள்ளரிக்காய், திராட்சை போன்றவை அதிகப்படியான கொழுப்புகளை உறிஞ்சி, சிறுநீர் வழியே வெளியேற்றி விடும். கொழுப்பே இல்லாத உணவாகிய மீனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கொழுப்பு குறைந்து உடல் எடை குறையும்.
சோற்றுக் கற்றாழையின் சதைப்பகுதியை நன்றாக கழுவி அதனை சாப்பிட்டு வந்தால், வயிற்றில் உள்ள கிருமிகள் மற்றும் நச்சுக்களை வெளியேற்றி வயிற்றை சுத்தப்படுத்தும். உடலின் உள் உறுப்புகள் நச்சுக்கள் இல்லாமல் சுத்தமாக இருந்தாலோ கொழுப்பில்லா நல்வாழ்வு வாழலாம். சின்ன வெங்காயத்தை பசு நெய்யில் வதக்கி அரைத்து பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால் அடி வயிறு சதை குறையும்.
காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தண்ணீரில் இரண்டு டீ ஸ்பூன் சுத்தமான தேன் கலந்து அத்துடன் முருங்கை இலைகள் சுமார் பத்து கிராம் அளவில் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தண்ணீரை குடிக்க வேண்டும். இந்த முறையால் பெண்களுக்கு குழந்தை பிறந்த பின் வயிற்றில் ஏற்படும் தொப்பை கூட குறையும்.
தவிர்க்க வேண்டிய வழிமுறைகள்
எண்ணையில் பொரிக்கப்பட்ட மொறுமொறுப்பான ஸ்நாக்ஸ் சாப்பிடும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும். தினமும் காலை எழுந்ததிலிருந்து இரவு தூங்கச் செல்லும் வரை குடிக்கும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும். பாஸ்ட் ஃபுட் உணவுகள், பீட்சா, பர்கர், டின் உணவுகள், இனிப்பு பதார்த்தங்கள், ஹாட பாக்ஸில் அடைக்கப்பட்ட உணவுகள், உப்பு அல்லது சோடியம் நிறைந்த உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். தினசரி வேக வைத்த காய்கறிகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். தினமும் நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை அளவான உணவை குறிப்பாக வயிறு முற்றிலும் நிரம்ப சாப்பிடாமல் உட்கொள்ள வேண்டும். சாப்பிடும் போதும், சாப்பிட்ட பிறகும் தண்ணீர் பருகுவதை தவிர்க்க வேண்டும். சாப்பிட்ட பிறகு சுமார் இருபது நிமிடங்கள் கழித்து தானாகவெ தாகம் எடுக்கும். அப்போது தேவையான அளவு தண்ணீர் குடித்தால் போதுமானது. இரவு நேரத்தில் எட்டு மணிக்கு மேல் உணவு உண்ணும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும். அதற்கு மேல் பசி ஏற்பட்டால் ஒரு டம்ளர் பால் அல்லது சிறிது பழங்களை சாப்பிடலாம்.
இயற்கை மருந்துகளை தொடர்ந்து உட்கொண்டு வரும் வேலையில், தாகம் எடுக்கும் போது குளிர்பானங்கள், சோடா பானங்கள் போன்றவற்றை குடிப்பதை தவிர்த்து, தண்ணீரை அதிக அளவில் பருக வேண்டும். அதிலும் உணவிற்கு முன்பாக நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் அல்லது காய்கறிகள் சாப்பிடுவது, சிறிது தண்ணீர் பருகுவது மூலம் அதிக உணவு உட்கொள்வதை தவிர்த்து உடல் எடையை குறைக்கலாம். சிறிய அளவில் தானியங்கள், காய்கறிகள், சர்க்கரை சேர்க்காத கிரீன் டீ போன்றவை சேர்த்துக் கொள்ளலாம். உணவுகளில் எண்ணை சேர்ப்பதை தவிர்த்து சரியான டயட் மற்றும் உடற்பயிற்சியை செய்து வந்தால் நல்ல பலனை அடையலாம். மேற்கண்ட வழிமுறைகளில் நமது வேலைகள் நடைமுறைகளுக்கு ஏற்றவாறு தேர்ந்தெடுத்து கடைபிடித்து வந்தால் அளவுக்கு அதிகமான கொழுப்பு சேராமால், அழகான உடலமைப்புடன் நல்வாழ்வு வாழலாம்.
தொகுப்பு – ராஜேந்திரன்
நன்றி : தினபூமி