செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் பெண்களுக்கு மாரடைப்பு வருவதற்கான காரணங்களும்… செய்ய வேண்டியவையும்…!

பெண்களுக்கு மாரடைப்பு வருவதற்கான காரணங்களும்… செய்ய வேண்டியவையும்…!

3 minutes read

மாரடைப்பு என்பது உயிருக்கு ஆபத்தான நிலையை ஏற்படுத்தக்கூடியது. பெண்களுக்கு இது எத்தகைய அறிகுறிகளை வெளிப்படுத்தும் என்பது குறித்து பார்ப்போம்.

நெஞ்சு வலி: இது ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஏற்படும். ஆனால் பாதிப்பின் தன்மை மாறுபடும். பொதுவாக பெண்கள் மார்பை அழுத்தும் வலியை அனுபவிக்கிறார்கள். மார்பும் இறுக்கமடையும். ஆண்களை பொறுத்தவரை மார்பில் கடும் இறுக்கம் ஏற்படும். மார்பு வலியும் உண்டாகும்.

ஆனால் சில பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படும் போது மார்பு வலி கூட இருக்காது. மார்பு பகுதியில் சிறு அசவுகரியத்தை உணரலாம். அதனை சாதாரண வலியாக இருக்கும் என்று தவறாக கருதக்கூடாது.

பலவீனம்: மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகளை ஒரு வாரத்திற்கு முன்பே அனுபவிக்க நேரிடும். அதனை கருத்தில் கொண்டால் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவிடலாம். முதல் அறிகுறியாக உடல் பலவீனமாக இருப்பதை உணரலாம்.

சில சமயங்களில் திடீர் பலவீனம் காரணமாக உடல் நடுங்கலாம். இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். மாரடைப்பு வருவதற்கு முன்பு பதற்றம், தலைச்சுற்றல், மயக்கம் மற்றும் லேசான தலைச்சுற்றல் போன்றவற்றை உணரலாம். அவற்றை அலட்சியப்படுத்திவிடக்கூடாது.

மூச்சுத் திணறல்: பெண்களை பொறுத்தவரை மாரடைப்பு ஏற்படப்போவதை உணர்த்தும் தெளிவான அறிகுறி இதுவாகும். சுவாசம் அதிகரிப்பதோடு மார்பு வலியும் உண்டாகும். இதயப்பிரச்சினை அல்லது கடுமையான நோய் பாதிப்பு இருந்தால் மூச்சுத்திணறல் நிகழக்கூடும். அதை கடுமையாக எடுத்துக்கொள்ள வேண்டும். மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பு நடக்கும்போதோ, படுத்திருக்கும்போதோ, எழும்போதோ மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். அத்தகைய மூச்சுத்திணறலை உணர்ந்தால் உடனே மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

உடல் வலி: கடுமையான வேலைகளை செய்தாலோ, உடல் சோர்வு அடைந்தாலோ உடல் வலியை உணரலாம். பொதுவாக முதுகின் இரு புறமும் வலி இருந்து கொண்டிருக்கும். ஆனால் மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பு பெண்களின் உடலின் மேல் பகுதியில் வலியை சந்திக்க நேரிடும்.

அதாவது முதுகின் மேல் பகுதி, கைகள், கழுத்து, தாடை போன்ற பகுதிகளில் வலி ஏற்படும். மிகவும் அசவுகரியமாகவும், மன அழுத்தமாகவும் இருக்கும். அப்படி உடலின் ஒரு பகுதியில் வலி ஏற்பட தொடங்கி பின்பு மற்ற பகுதிகளுக்கு படிப்படியாக பரவும். அப்படி மேல் பகுதியில் வலி ஏற்படத்தொடங்கும்போதே மருத்துவரை அணுகுவது அவசியமானது.

அதிகமாக வியர்த்தல்: பெண்களுக்கு மாரடைப்பு வருவதற்கான முக்கிய அறி குறிகளில் ஒன்று அதிகப்படியான வியர்வை வெளிப்படுவதாகும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் மாரடைப்பு ஏற்படும்போது ஆண்களுக்கு வியர்வை அதிகமாக வெளியேறுவதில்லை. வேலை செய்யும் போதோ அல்லது படுத்திருக்கும் போதோ திடீரென்று வியர்வை ஏற்படலாம். வியர்வையுடன் திடீர் குளிர்ச்சி அல்லது குளிர் வெப்ப நிலையை உணரலாம். இது மாரடைப்புக்கான தெளிவான அறிகுறியாகும்.

சோர்வு: பெரும்பாலான சந்தர்ப்பங்களில் வியர்வை, உடல் பலவீனம் ஆகியவற்றுடன் சோர்வும் ஏற்படும். இந்த மூன்று அறிகுறிகளும் பெண்களுக்கு மட்டுமே இருக்கும். மாரடைப்பு ஏற்படுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு பெண்கள் கடும் சோர்வுடன் காணப்படுவது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுபோன்ற நிலையில் விரைவாக மருத்துவ சிகிச்சை பெறுவது நல்லது.

வயிற்று பிரச்சினைகள்: வயிற்றுப் பகுதியில் வலி, அசவுகரியம் மற்றும் அழுத்தத்தை உணரக்கூடும். மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பு இந்த அறிகுறிகள் பெண்களுக்கு மட்டுமே வெளிப்படும். குமட்டல், வாந்தி போன்ற பாதிப்புகளும் உண்டாகலாம். வயிற்றில் ஏற்படும் வலி செரிமான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். உடல் சோர்வு அடைந்துவிடும். எதையும் சாப்பிட முடியாது.

தூக்கமின்மை: மாரடைப்புக்கு ஆளாகும் பெண்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு தூங்குவதில் சிக்கல் காணப்படும். மாரடைப்பு ஏற்படுவதற்கு சில இரவுகளுக்கு முன் தூக்கத்தில் பிரச்சினைகள் வரலாம். ஒன்று தூங்க முடியாமல் போகலாம் அல்லது நள்ளிரவில் வழக்கத்திற்கு மாறாக பல முறை எழுந்திருக்கலாம். அதிக ஓய்வு எடுத்தாலும், போதுமான அளவு தூங்கி இருந்தாலும் உடல் சோர்வாக இருப்பதை உணரலாம். இதுபோன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டால், மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.

நன்றி -வைத்தியர் -மீரா

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More