செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் மூளை வளர்ச்சிக்கு உதவும் பகல் தூக்கம்

மூளை வளர்ச்சிக்கு உதவும் பகல் தூக்கம்

3 minutes read

முதுமையில் சிறிதுநேர பகல் தூக்கம் மூளையின் நலத்திற்கு உதவுகிறது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். செல்கள் தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் நரம்பியல் கோளாறு (neurodegeneration) உள்ளவர்களிடம் துரிதமாக ஏற்படும் மூளை சுருங்கும் நிகழ்வை (brain shrinkage) தாமதப்படுத்த இது உதவுகிறது.

நீண்ட நேர பகல் தூக்கம் அல்சைமர்ஸ் நோய்க்குக் காரணமாகலாம் என்று முந்தைய ஆய்வுகள் கூறியிருந்தன. வேறு சில ஆய்வுகள் இவ்வாறு தூங்கும் பழக்கம் ஒருவரின் கற்கும் திறனை மேம்படுத்துகிறது என்று கூறின. மூளை சுருங்குதல் நிகழ்வு உடல் உறுப்புகள் ஒருங்கிணைந்து செயல்படும் திறனில் கோளாறு மற்றும் நரம்பியல் செல்கள் சுயமாக அழியும் குறைபாடு உள்ளவர்களிடம் வயதாகும்போது அதிகரிக்கிறது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தூக்கப் பிரச்சனைகளுடன் இது தொடர்புடையதாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

மூளையின் கன அளவு

மூளையின் மொத்த கன அளவு மற்றும் ஒருவரின் பகலில் தூங்கும் பழக்கத்திற்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருப்பது இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. பகலில் தூங்குபவரின் மூளையின் கன அளவு பெரிதாக உள்ளதால் குறைவான தூக்கத்தால் ஏற்படும் நரம்பியல் கோளாறுகள் வராமல் தடுக்கப்படுகிறது. லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி (UCL) மற்றும் உருகுவே நாட்டின் குடியரசு பல்கலைக்கழக (Republic University) ஆய்வாளர்கள் இணைந்து நடத்திய இது பற்றிய ஆய்வுக்கட்டுரை Sleep Health என்ற ஆய்விதழில் வெளிவந்துள்ளது.

பிரிட்டன் உயிரி வங்கியில் (Bio bank) இருந்து பெறப்பட்ட 40 முதல் 69 வயது வரை உள்ள 500,000 பேரின் மரபணு, வாழ்க்கை முறை மற்றும் சுகாதாரம் குறித்த தரவுகள் ஆராயப்பட்டன. இதே இடத்தில் இருந்து பகலில் தூங்கும் பழக்கம் பற்றி முன்பு சுயமாக தகவல் தெரிவித்த 35,080 பேரிடம் இருந்து சேகரிக்கப்பட்ட அவர்களின் பகலில் தூங்கும் பழக்கத்திற்கும் மரபணு வேறுபாடு, உடல் உறுப்புகளின் ஒருங்கிணைப்புத் திறன் கோளாறுகள் மற்றும் அவர்களின் மூளையின் ஆரோக்கியத்திற்கும் இடையில் இருக்கும் தொடர்பு பற்றியும் ஆராயப்பட்டது.

இயல்பான பகல் தூக்கம்

மரபணு, பழக்க வழக்கம் மூலம் பகலில் தூங்கும் செயல் பற்றி ஆராயப்பட்டதால் புகைப்பழக்கம், மது அருந்துதல், உடற்பயிற்சி போன்ற வாழ்க்கைமுறை பழக்க வழக்கங்களால் மூளையில் ஏற்படும் தாக்கங்கள் இல்லாமல் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் மூலம் இயற்கையாக ஒருவர் பகலில் தூங்கும் பழக்கம், மூளையின் செயல்பாட்டில் விளைவிக்கும் நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது என்று லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி விஞ்ஞானியும், ஆய்வுக் கட்டுரையின் இணை ஆசிரியர்களில் ஒருவருமான டாக்டர் விக்டோரியா கார்ஃபீல்டு (Dr Victoria Garfield) கூறுகிறார்.

ஆய்வில் பங்கேற்றவர்களில் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவானவர்களிடம் தூங்கும் பழக்கத்தில் வேறுபாடுகள் இருந்தன என்றும் அவர் கூறுகிறார். முன்பு இது பற்றி நடந்த ஆய்வுகள் தெளிவற்ற முடிவுகளைத் தந்தன. ஆனால் இந்த ஆய்வு ஒருவர் மரபணு மூலம் பெற்ற முன்கூட்டி முடிவு செய்யும் பண்பிற்கும் (genetic predisposition), அவர் பழக்கம் காரணமாக பகலில் தூங்குவதற்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருப்பது தெரியவந்தது.

மூளையின் கன அளவு பெரிதானால்…

மூளை சுருங்குதல் தடுக்கப்பட்டு அதன் கன அளவு பெரிதாவது ஒருவருக்கு முதுமை ஏற்படுவதை 2.6 முதல் 6.5 ஆண்டுகள் தாமதப்படுத்துகிறது என்று இதன் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் செயல்களுக்கு உடனுக்குடன் பதில் வினை புரியும் திறனுக்கும் பகல் தூக்கத்திற்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். டிமென்சியா போன்ற மறதி நோய்கள் வராமல் தடுக்க, நேர்மறை எண்ணங்களை வளர்க்க பகலில் சிறிது நேரம் தூங்குவது உதவுகிறது.

இந்தத் தூக்கம் 15 முதல் 30 நிமிடங்கள் வரை இருந்தால் நல்ல பலன் ஏற்படுகிறது. டிமென்சியா உட்பட பல காரணங்களால் ஒருவரின் மூளையின் கன அளவு சுருங்குகிறது. குட்டி பகல் தூக்கத்தின் மூலம் இது தடுக்கப்படுகிறது. பிரிட்டனைச் சேர்ந்தவர்களிடம் மட்டுமே இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் உலகம் முழுவதும் இந்த ஆய்வுகள் விரிவாக நடத்தப்பட வேண்டும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்ற்அனர்.

ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் தூக்கம்

மூளையின் நலத்திற்கு தூக்கம் அவசியம் என்பதை இந்த ஆய்வு முடிவுகள் வலியுறுத்துகின்றன. வயதாகும்போது மூளையில் நிகழும் மாற்றங்கள், தூக்க நலம் மற்றும் அதன் ஆரோக்கியம் பற்றிய வருங்கால ஆய்வுகளுக்கு இது ஒரு வழிகாட்டியாக அமையும் என்று பிரிட்டிஷ் நரம்பியல் சங்கத் தலைவர், யு கே டிமென்சியா ஆய்வுக்கழக குழுத் தலைவர் மற்றும் எடின்பரோ பல்கலைக்கழக மூளை அறிவியல் கண்டுபிடிப்பு ஆய்வுப்பிரிவு மையத்தின் துணை இயக்குனர் பேராசிரியர் டார ஸ்பையர்ஸ்-ஜோன்ஸ் (Prof Tara Spires-Jones) கூறுகிறார்.

பிரிட்டிஷ் செய்தித்தாள்களில் வெளிவந்துள்ள இந்த ஆய்வுக்கட்டுரை பற்றி உலகில் பல நாடுகளில் இருந்தும் பொதுமக்கள் தங்களுக்கு இருக்கும் பகல் தூக்கம் பற்றி கருத்து தெரிவித்து வரவேற்றுள்ளனர். அதனால் நாமும் இனி தைரியமாக பகலில் ஒரு குட்டித் தூக்கம் போடலாம் வாங்க.

 

– சிதம்பரம் இரவிச்சந்திரன்

 

நன்றி : கீற்று இணையம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More