செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் புலம்பெயர் உறவுகளின் ஆதரவினால் பாரியதொரு வெற்றியைப் பெற முடியும் – அவுஸ்திரேலியாவில் சி. சிறிதரன், சீ. யோகேஸ்வரன்புலம்பெயர் உறவுகளின் ஆதரவினால் பாரியதொரு வெற்றியைப் பெற முடியும் – அவுஸ்திரேலியாவில் சி. சிறிதரன், சீ. யோகேஸ்வரன்

புலம்பெயர் உறவுகளின் ஆதரவினால் பாரியதொரு வெற்றியைப் பெற முடியும் – அவுஸ்திரேலியாவில் சி. சிறிதரன், சீ. யோகேஸ்வரன்புலம்பெயர் உறவுகளின் ஆதரவினால் பாரியதொரு வெற்றியைப் பெற முடியும் – அவுஸ்திரேலியாவில் சி. சிறிதரன், சீ. யோகேஸ்வரன்

7 minutes read

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சர்வதேசக் கிளை அவுஸ்திரேலிய நகரங்களான சிட்னி, மெல்பேர்ண், அடெலெற் போன்ற இடங்களில் அங்குராப்பணம் செய்து வைப்பதற்காக இலங்கையில் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வருகை தந்திருந்தார்கள். கடந்த ஞாயிற்று கிழமை (04.08.13) விக்ரோறிய மாணிலதில் Gungerian community மண்டபத்தில் சிட்னியில் இருந்து வருகை தந்த அருந்தவராசா தலைமையின் கீழ் மெல்பேர்ண் இணைப்பாளர் கொர்ணேலியிஸ் அவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளையை அங்குராப்பணம் செய்து வைத்தார்கள்.

இலங்கையில் இருந்து வருகை தந்த மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் திரு.சீனித்தம்பி யோகேஸ்வரன் அவர்கள் இன்று கிழக்கு மாகாணத்தில் நடந்து கொண்டிருக்கும் அரசியல் நிகழ்வுகளையும், அங்கு மக்கள் படும் அவலங்களையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றியும் மிகத்தெளிவாக எடுத்துரைத்தார்.

இதனைத் தொடர்ந்து கிளிநொச்சி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் திரு. சிவஞானம் சிறிதரன் அவர்கள் உரையாற்றுகையில் முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்குப் பின்

தமிழ் மக்கள் படும் சொல்லோணத் துன்பத்தையும் அவர்கள் ஒரு நாள் வாழ்வைக் கழிக்கப் படும் கொடுமைகளையும் எடுத்துக் கூறியதோடு விதவைகள், அங்கவீனமானோரின் நிலை பற்றியும் மிகவும் உருக்கமான உரையை நிகழ்த்தியதோடு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலை,தமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுத்து வரும் நடவடிக்கைகள். தமிழ் தேசியக் கூட்டமைப்பால் தமிழ் மக்களுக்கு என்ன செய்ய முடியும், இன்றைய அரசியல் நகர்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுத்து வரும் வேலைத் திட்டங்கள் என்ன போன்ற விடையங்களுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பானது வடக்கில் நடாத்தப்படும் மாகாண சபை தேர்தலில் ஏன் போட்டியிடுகின்றது. மாகாண சபையால் தேர்தலால் தமிழ் மக்கள் பெற்று கொள்ளப் போகும் நன்மைகள் என்ன என்பதை விளக்கி சிறிதரன் அவர்கள் தனது அரசியல் சாணக்கியமான பேச்சை தந்தார்.

இதனைத்தொடர்ந்து ஒவ்வொரு மேசையிலும் வைக்கப் பட்டிருந்த வெள்ளைத் தாள்களில் பொது மக்களால்  எழுதிக் கேட்கப்பட்ட கேள்விகளை இரண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் கேள்விகளை கேட்க இரண்டு பாராளமன்ற உறுப்பினர்களும் மிகத் தெளிவாக பதில் வழங்கினார்கள். இறுதியாக இராப்போசனம் வழங்கும் போது திரு. தில்லைநடராசா நன்றியுரை நிகழ்த்த உணவுண்ட களைப்போடு மக்கள் வீடு சென்றனர்.

அவுஸ்திரேலியா மெல்பேர்னில் நடந்த தமிழ் தேசியக் கூட்டமைபின் சர்வதேசக் கிளை அங்குராப்பண வைபவத்தின் போது மண்டபத்தில் உள்ள மேசைகளில் வைக்கப் பட்ட வெள்ளைத் தாள்களில் பொது மக்களால் எழுதிக் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளமன்ற உறுப்பினர் சி.சிறிதரன்.அவர்களும் மட்டக்களப்பு பாராளமன்ற உறுப்பினர் சி.யோகேஸ்வரன் ஆகியோரும் பதில் தந்தனர். அவற்றை நாம் கீழே தொகுத்துத் தருகிறோம்.

கேள்வி: எங்கள் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் தனது ஆயுதங்களை முள்ளிவாய்க்காலில் மௌனித்த பின்பு தமிழ் தேசியக் கூட்டமைப்புத்  தான் எமது அரசியல் சக்தியாக இருக்கின்ற போது, எங்களுடைய தேசிய இனப்பிரச்சனையின் தீர்வு தொடர்பாக ரீ.என்.ஏ என்ன மாதிரியான  இறுதியானதும் உறுதியானதுமான தீர்வை நாடி நிற்கின்றது.?

எங்களுடய தீர்வு என்பதை நாங்களே வரலாற்று ரீதியாக பிறந்து வளர்ந்த எங்களுடைய வடக்குக் கிழக்கு இணைந்த தாயக மண்ணில் எங்களுடைய சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கப்பட்ட வகையில் தமிழ்த்தேசியம் ஏற்றுக் கொள்ளப்பட்ட வகையில் எங்களுக்கான கௌரவமான, நீடித்து நிலைக்கக் கூடிய ஒரு நியாயமானதீர்வு என்பதுதான் எங்களுடைய கொள்கை. அது ஒரு சமஸ்டி அடிப்படையிலான தீர்வு. நாங்கள் இப்பொழுது அந்தத் தீர்வுக்கான ஒரு வரைபை முன் வைத்தால் அதனைக் கூட ஒரு பெரிய பிரச்சாரமாக முன்வைத்து இலங்கையிலேயே அதற்கொரு எதிர்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வெற்றிவாகை சூடுவதற்கு சிங்கள அரசியல்வாதிகள் தயாராக இருப்பார்கள். ஆகவே நாங்கள் தெளிவாகப் பேசுகின்றபோது இந்த சமஸ்டி அடிப்ப டையிலான தீர்வை நாங்கள் முன்வைத்திருக்கின்றோம்.

கேள்வி: 13 வது திருத்தச் சட்டத்தில் சில மாற்றங்களும் திருத்தங்களும் இடம்பெற இருக்கின்ற இந்நிலையில் என்ன காரணத்துக்காக வடமாகாணசபைத் தேர்தலில் போட்டியிட இருக்கிறீர்கள்? அதனால் தமிழ் மக்களுக்கும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கும் ஏற்படப்போகும் நன்மைகள் என்ன என்று கூற முடியுமா?

இந்த வடமாகாண சபை தேர்தலில் நாம் பங்கு கொள்வது என்பது வெறுமனையே முதலமைச்சர் பதவிக்காகவோ அல்லது வடமாகாணசபைத் தேர்தலால் நாம் எதையும் சாதித்து விடுவோம் என்ற அவாவினாலோ நாம் இதில் பங்கு கொள்ளவில்லை. இன்றைய தமிழ் தேசியப் பிரச்சனை ஒரு சர்வதேசமயப்படுத்தப்பட்ட நிலையிலெமது மக்கள் எத்தனையோ உயிர்களையும் தம் உறவுகளையும் அங்கவீனர்களாக இழந்து விட்ட நிலையிலும் தமிழ்த் தேசியம் அதன் அடிப்படை உரிமை பாதுகாக்க வேண்டும் என்ற நிலையிலும் உறுதியாகவும் அறுதியாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்போடு நிற்கின்றார்கள் என்பதை சர்வதேசத்துக்கு உணர்த்தவும், நாம் பங்கு பற்றாது போனால் 17 வாக்குகளுடன் இன்னொரு உறுப்பினர் வந்தும் விடலாம் அல்லவா?

கேள்வி: இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு  பலவிதமான அரசியல் முன்னணிகளை உள்வாங்கிய அமைப்பாக இருக்கின்றீர்கள். இந்தக் கூட்டமைப்பின் எதிர் கால நோக்கம் எவ்வாறு இருக்கின்றது?. இந்த ரீதியில் ஏன் சிவில் சமூகம், தேசிய முன்னணி போன்ற அமைப்புகளுடன் இயங்க முடியாது, அல்லது அதற்கான முயற்சியைச் செய்கின்றீர்களா?

தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தமட்டில் நாங்கள் 5 கட்சிகள் இருக்கின்றோம், நாங்கள் ஒற்றுமையாக இருந்து செயற்பட்டுக்கொண்டிருக்கிறோம். அதே வேளை எங்கள்  தமிழ் தேசிய முன்னணியுடன் சேரமுடியாது என்று நாங்கள் சொல்லவில்லை. ஆனால் அவர்கள் தான் தள்ளி நிற்கிறார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆரம்பித்த தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் தங்களுக்கு எதிரானவர்களைக் கூட இணைத்து வேலை செய்திருக்கிறார்கள். அதன் பின்பு தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தவர்களைக் கூட நாம் இணைத்து வேலை செய்திருக்கிறோம். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தமட்டில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கென்றொரு கொள்கை இருக்கின்றது. அதனோடு இணைந்து சமகால வேலைத்திட்டங்களை நாம் மேற்கொள்ள யார் இணைந்தாலும் அவர்களை இணைத்துக் கொள்வோம். அதேபோல் சிவில் சமூகத்துடனும் எம்மை விளங்கப்படுத்தி பேசி வருகிறோம்.

கேள்வி: 13 வது திருத்தத்தின்படி உருவாக்கப்பட்டுள்ள தற்போதுள்ள மாகாணசபைகள் இன நெருக்கடிக்கான தீர்வை வழங்கவில்லை என்றதொரு நிலைப்பாட்டில் தான் நீங்கள் இருக்கின்றீர்கள். அவ்வாறானதொரு நிலமையிலும் மாகாணசபைத் திட்டத்தை ஏற்றுக்கொண்டு இத் தேர்தலில் போட்டியிடுவதற்கான காரணம் என்ன?

13 வது திருத்தம் என்பது தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வல்ல. அதை ஒரு ஆரம்பப் புள்ளியாகவோ அல்லது அதையொரு இடைக்காலத்தீர்வாகவோ நாம் ஏற்றுக் கொள்ளவில்லை. இதற்கு வரலாற்று ரீதியாகப் பல விடையங்களைப் பார்க்கலாம். குறிப்பாக இந்திய – இலங்கை ஒப்பந்தம் கைச் சாத்திடப் பட்ட போது விடுதலைப் புலிகள் அதை எதிர்த்திருந்தார்கள். அதேபோன்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்களான அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், மற்ரும் சம்பந்தன் ஆகியோர் இந்தியப் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்கள். அதே போன்று 2010 பாராளுமன்றத்தேர்தல் முடிவடைந்த பின்னர் பாராளுமன்றத்தில் உரையாற்றிய சம்பந்தன் ”13 வது திருத்தத்தை நாம் எப்போதே அடக்கம் செய்து விட்டோம்” என்று கூறியிருந்தார்.  ஆகவே 13 இல் தமிழ் மக்களுக்குத் தீர்வு இருப்பதாக நாம் சொல்லவில்லை. ஆனால் இலங்கையிலே ஒரு சட்டரீதியாகக் கொண்டுவரப்பட்டு சட்டத்திற்குள் உள்வாங்கப்பட்ட விடயமென்ற அடிப்படையில் 1978 இல் அரசியலமைப்புச் சட்டத்திற்குள் கொண்டுவரப்பட்ட ஒரு புதிய திருத்தமாக இந்த 13 வது திருத்தமாக இருப்பதன் காரணமாக அதிலுள்ள சட்ட நிலமைகளை நடைமுறைப் படுத்த வேண்டுமென்பது ஒரு முக்கியமான விடயமாகும்.

இவ்வாறான சூழ்நிலையில் நாம் தேர்தலில் போட்டியிடாமல் இருந்தால் விரும்பத்தகாத அல்லது பொருத்தமற்றவர்கள் இத் தேர்தலில் களமிறங்குவதன் மூலம் தமிழர்களின் அரசியல் பெருவெளி இன்னும் அதிகரித்துச் செல்லக் கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன. ஆகவே  இத் தேர்தலை தமிழ் மக்கள் எங்களுடன் இருக்கிறார்கள் அவர்கள் தங்களுடைய வரலாற்று ரீதியான தாயக மண்ணிலே தங்களுடைய சுய நிர்ணய உரிமை, மரபுவழித்தாயகம். தமிழ்த் தேசியம் அங்கீகரிக்கப்பட்ட வகையில் தங்களுக்கு ஒரு கௌரவமான நீடித்து நிலைக்கக் கூடிய அரசியல் தீர்வு வளங்கப்பட வேண்டும் என்ற நிலையில் இருக்கிறார்கள் என்ற எண்ணத்தை வெளிப்படுத்துகின்ற தேர்தலாகவே நாம் இதைப் பார்க்கின்றோம்.

கேள்வி: வட மாகாணத்தில் உங்களுடைய வெற்றி வாய்ப்புக்கள் எவ்வாறான நிலையில் உள்ளன?

நாம் அமோகமாக வெற்றி பெறுவோம். நாம் ஏன் வெற்றி பெறவேண்டும்  என்பதை தமிழர்கள் இன்று உணர்ந்துள்ளார்கள். இத் தேர்தலில் எதிர்த்தரப்பில் போட்டியிடப் போகின்ற தமிழ் வேட்பாளர்கள் கூட இச் சந்தர்ப்பத்தைத் தமிழர்கள் இழந்தால் இனிவரும் காலங்களில் தமிழர்களுக்கு எந்த ஒரு தீர்வும் இல்லை என்பதை உணர்ந்துள்ளார்கள்.

அதே போன்று இந்தத் தேர்தலில் வாக்களிக்கத் தவறினால் ஒட்டுமொத்த எண்ணங்களை வெளிப்படுத்தத் தவறினாலினிமேல் இந்த மண்ணிலிருந்து வாழக்கூடிய வல்லமையை இழந்துவிடுவோம் என்பதில் தமிழ் மக்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள்.

இத் தேர்தலில் 2/3 பெரும்பான்மை என்பது மிக முக்கியம். இப் பெரும்பான்மைப் பலம் இருந்தால்தான் எதிர் வரும் காலங்களில் எம்மால் பல விடயங்களைச் செயல்படுத்த முடியும். ஆகவே இத் தேர்தலில் நாம் 2/3 அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவோம். இருந்தபோதும் இந்த வெற்றி என்பது இழந்துபோன எங்களுடைய மக்களது ஒரு சர்வதேச விசாரணைக்கான முடிவாகவோ அல்லது அது தேவையில்லை என்பதாகவோ இது அமையாது. இத் தேர்தலை எங்களுடைய மக்களின் எதிர்கால இருப்பிற்கானதும் தொடர் வழிக்கான ஒரு பயணமாகவும் நாம் பார்க்கின்றோம்.

கேள்வி: தமிழ் மக்களுடய அரசியலைப் பொறுத்தவரையில் வடமாகாணசபைத்தேர்தல் எந்தளவுக்கு முக்கியமானது என நீங்கள் கருதுகிறீகள்?

இத் தேர்தல் அரசு முன் வந்து நடத்தும் தேர்தல் அல்ல. சர்வதேசத்தின் அழுத்தத்தினால் நடத்தப் படும் ஒரு தேர்தல். 2012, 2013 ஆம் ஆண்டில் ஜெனிவாவில் கொண்டுவரப்பட்ட அமெரிக்காவின் பிரேரணையில் இத் தேர்தல் நடத்தப் படவேண்டும் என்று சொல்லப்பட்டு இருந்ததுடன் இந்தியாவும் வடமாகாணசபைத் தேர்தலை நடத்தவேண்டும் என அழுத்தம் கொடுத்திருந்தது. ஆகவே இத் தேர்தலை சர்வதேசம் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறது.

எனவே சர்வதேசம் எங்களுக்கு ஒரு தீர்வை வழங்குவதற்கு தமிழர்கள் பலமாக இருக்கின்றார்களா? அவர்கள் எந்த அடிப்படையில் இத் தேர்தலுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.என்பதை அவதானித்துக் கொண்டிருக்கிறது. அதேபோன்று தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு என்பதற்கு தமிழர்கள் எவ்வாறு வாக்குகள் மூலம் வெளிப்படுத்தப் போகிறார்கள் என்பது மிக முக்கியம்.

எனவே இத் தேர்தல் தமிழ் மக்களைப் பொறுத்தவரை அவர்களுடைய எதிர்கால வாழ்வின் மீதும் எதிர்கால இருப்பின் மீதும் தமிழர்களுடய கலாச்சார, பண்பாடு, நிலம், மொழி சார்ந்த அடிப்படையில் அவர்களே தீர்மானிக்கப் போகும்  தேர்தலாக அமையுமே தவிர, இது தான் தீர்வு என்று தமிழர்களை நாம் ஏமாற்றவில்லை.

chand

கேள்வி: தமிழ் மக்களுக்கும் புலம்பெயர்ந்த சமூகத்திற்கும் என்ன கூற விரும்புகிறீர்கள்?

எங்களுடைய வரலாற்று ரீதியான மண்ணில் நாம் தொடர்ந்து வாழலாமா? என்பதற்கான ஒரு கருத்துக் கணிப்பே இத் தேர்தல். 

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கூட தமிழர்கள் பிரிந்து வாழக்கூடியதான ஒரு பொது வாக்கெடுப்பை நடத்தும்படி கோருகிறார், எங்களுடைய மண்ணில் வாழ்வதற்கான உரிமை, எங்களுடைய மொழி காப்பாற்றபடுவதற்கான உரிமை, எங்களுடைய இனம் நிலைத்து நிற்பதற்கான உரிமை, எதிர் காலத்தில் இந்த மண்ணில் நாம் ஒரு பிரஜையாக வாழ்வதற்கான உரிமைக்கான ஒரு பொதுசன வாக்கெடுப்பாக இத் தேர்தல் அமைந்திருப்பதால் தமிழ் மக்கள் வாக்களிப்பு தினத்தன்று தங்களுக்கு எந்தப் பிரச்சனைகள் இடையூறுகள் இருந்தாலும், முழுமையாக வாக்களிக்க வேண்டும்.

குறிப்பாக வடக்கில் வாழும் பெரும்பாலான மக்கள் புலம் பெயர் உறவினரின் உதவியுடனேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

ஆகவே புலம்பெயர் உறவுகள் ஒவ்வொருவரும் இங்கு வாழும் தமது உறவுகளுக்கு ஒரு பாரிய அழுத்தத்தைக் கொடுத்து, அவர்களை தமிழ்க் கூட்டமைப்புக்கு வாக்களிக்கச் செய்வதன் மூலமே நாம் பாரியதொரு வெற்றியைப் பெற முடியும்.

arooraan  ஆவூரான் | ஆஸ்திரேலியாவிலிருந்து

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More