தென்மராட்சிக் கல்வி வலயத்தால் ஒழுங்குசெய்யப்பட்ட கலை நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்கள் ஆற்றிய உரையின் போது மேற்படி கூறியுள்ளார். இரணைமடு – யாழ்ப்பாண குடி நீர் விநியோகம் நடைமுறைப்படுத்தப்பட்டால் கிளிநொச்சி வாழ் விவசாயிகள் பலர் தற்கொலை செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம். ஒரு மாவட்ட மக்களைப் பாதிக்கச் செய்து அந்த மாவட்டத்தின் வளத்தில் இன்னொரு மாவட்ட மக்களை வாழவைப்பதை என்னால் ஒரு போதும் ஏற்க முடியாது. இத்திட்டத்தை நானும் கிளிநொச்சி மாவட்ட மக்களும் விவசாயிகளும் எதிர்க்கின்றோம் எனக்கூறியுள்ளார்.
மேலும் கிளிநொச்சியில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் வாழ்கிறார்கள். இவர்கள் இரணைமடு நீரை நம்பி ஜீவனோபாயத்தை நடாத்துபவர்கள். அந்தத் தண்ணீருக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கையில் பல மாற்றங்கள் இதுவரை நடந்ததில்லை. கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள் முற்றாக அழிக்கப்பட்டு அங்கு மீண்டும் மக்கள் குடியமர்ந்து வாழுகின்ற நிலையில் மீண்டும் மற்றுமோர் அழிவுப் பாதையாகத்தான் இரணைமடு யாழ் குடி நீர் விநியோகத் திட்டத்தினைக் கொண்டு வருகிறார்கள் என அவர்கள் பார்க்கிறார்கள்.
இரணைமடுக் குளம் 34 அடிகளைக் கொண்டது. 2 அடிகளை உயர்த்தி அந்த மேலதிக நீரைத்தான் யாழ்ப்பாணம் கொண்டு செல்ல நினைக்கிறோம் என அதனைக் கொண்டு செல்ல நினைக்கின்றவர்கள் சொல்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல.
கிளிநொச்சி இரணைமடுக் குளத்தில் இருந்து கிளிநொச்சியில் முப்பத்தி நான்காயிரம் ஏக்கர் வயல் நிலங்களுக்கு நீர் பாய்ச்ச முடியும். ஆனால் சிறுபோகப் பயிர்ச்செய்கையின் போது எட்டாயிரம் ஏக்கர்களுக்கு மட்டுமே நீர் பாய்ச்சக் கூடியதாக உள்ளது. இந்த எட்டாயிரம் ஏக்கர்களை பதினாறாயிரம் ஏக்கர்களாக மாற்றமுடியுமா என இப் பகுதி விவசாயிகள் கடந்த 70, 80 வருடங்களாகக் கேட்டு வருகின்றார்கள். இந்த நிலையில் முப்பத்தி நான்காயிரம் ஏக்கர்களுக்கும் சிறு போகத்தில் நீர் வழங்கி அதற்குப் பின்னர் எஞ்சியிருந்தால் அது மேலதிக நீராக இருக்கலாம். இருபத்தெட்டாயிரம் ஏக்கர்களுக்கு நீர் பற்றாக்குறையாக இருக்கையில், மேலதிக நீர் என்பது எங்கிருந்து வரும்? யாழ்ப்பாண மக்களுக்கு இத்திட்டம் சம்பந்தமான உண்மையான விடயங்களை திட்டத்தோடு தொடர்புபட்டவர்கள் சொல்லவில்லை. இருபதாயிரம் மில்லியன் பணம் திரும்பிப் செல்லப் போகின்றதே என்று மட்டும் கூறுகிறார்கள். இதன் விளைவாக ஒரு மாவட்டம் அழியப்போகின்றதென்றோ ஒரு இனத்தின் வாழ்வு சிதைக்கப்படப் போகின்றதோ என்றோ யாரும் சிந்திப்பதாக எனக்குத் தெரியவில்லை.
இவ்வருடம் மழை முழுமையாகப் பெய்திருக்கின்றது. தற்போது இக்காலத்தில் இரணைமடுவில் 34 அடி நீர் இருக்க வேண்டும். ஆனால் 12 அடி வரை தான் நீர் உள்ளது. இனிமேல் மழை வந்தாலும் இம்முறை விதைக்க முடியாது. இந்த இரணைமடுக் குளத்தின் நிலையைச் சரியாகப் புரிந்து கொள்ளுங்கள் என்று நான் எங்கள் கட்சியிடம் கேட்டேன். முதலமைச்சரிடம் கேட்டேன். எங்கள் மாகாண சபையின் சகல உறுப்பினரையும் கூப்பிடுங்கள். எமது பாராளுமன்ற உறுப்பினர்களையும் அழையுங்கள். எங்கள் பிரதேச நகர சபையினரையும் அழையுங்கள். அவர்களால்தான் இந்த நீரை வழங்குவது தொடர்பான முடிவினை எடுத்து இத்திட்டத்தை நிறைவேற்ற முடியும்.
எனவே நாங்கள் விவசாயிகளையும் அழைத்துப் பேசுவோம். சரியான விளக்கத்தை அவர்களுக்கும் கொடுப்போம். 2010.05.29 யாழ் செயலகத்தில் அப்போதைய அரசாங்க அதிபர் கே.கணேஸ் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அது முடிந்து இன்று 44 மாதங்கள் முடிவடைந்து விட்டன. இக்கூட்டத்தில் வைத்து நான் மிகத் தெளிவாக இத்திட்டம் தொடர்பாகக் கூறியிருந்தேன். பல பத்திரிகையாளர்கள் அதை விரிவாக எழுதியிருந்தார்கள்.
இது வரை இத் திட்டம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அல்லது கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடப்படவில்லை. இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துபவர்கள் ஒரு பக்கச் சார்புடையவர்களாகச் செயற்படுகிறார்கள். இந்த நிலையில் தாம் எடுத்த முடிவு சரியென அவர்கள் நினைத்தார்கள். மாகாண சபை வந்தது. தேர்தல் நடந்தது. மாகாண சபையிடம் குளம் வந்து விட்டது. விவசாயிகளிடம் மீண்டும் கையெழுத்து வாங்கும் காலம் வந்தது.
2007 இல் மேற்படி திட்டத்திற்கு ஒரு விவசாயியிடம் ஒப்புதல் கையெழுத்து வாங்கியதாகக் கூறியிருக்கிறார்கள். ஆனால் 2010ம் ஆண்டிலேயே கையெழுத்தை வாங்கியிருக்கிறார்கள். அது கூட அதில் குறிக்கப்பட்டுள்ள பெயருடையவரின் கையொப்பமா என்பது சந்தேகமாகவுள்ளது. ஆகவே இத்திட்டத்தை வெளிப்படையாகச் செய்ய ஏன் தயங்குகிறார்கள் என்ற கேள்வி எழுகின்றது.
இந்த இடத்தில் இவ்விடயம் பேசவேண்டியது மிக முக்கியமானதாக அமைகின்றது. ஏனென்றால் இத்தண்ணீர் தொடர்பில் நான் தான் அடிக்கு மேல் அடி வாங்குகின்றேன். நான் இந்தப் பிரதேசத்தில் பிறந்து நடந்து வந்து வயல் செய்தவன் என்ற வகையில் இந் நீர் பற்றி அடிக்கடி கூறிக்கொள்கிறேன்.
தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள், இரணைமடு என்பது எம்மை அழிப்பதற்கான நீர்த்திட்டமாக இருக்கக் கூடாது. அது முதலில் அப்பிரதேச விவசாயிகளுக்குப் பயன்பட வேண்டும்.இதை அனைவரும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்”