20 இலட்சம் ரூபா போலி நாணயத் தாள்கள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் வீட்டிலிருந்து மேலும் 20 இலட்சம் ரூபா போலி நாணயத் தாள்களை குற்றப் புலனாய்வு பிரிவு பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபரின் எதுல்கோட்டை பிரதேசத்திலுள்ள வீட்டை அதிரடியாக சோதனையிட்ட இரகசிய பொலிஸார் மடி கணனி, பிரின்டர், டொங்கிள், ஏ-4 தாள்கள் மற்றும் கட்டிங் மெஸினையும் மீட்டெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
சந்தேக நபரின் வீட்டிலிருந்து போலியான அச்சிடப்பட்ட 5000 நாணயத் தாள்கள் 424 மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர். இவற்றில் முழுமைபெறாத நாணயத் தாள்களும் அடங்குவதாக அவர் மேலும் தெரிவித்தார். இந்தச் சம்பவத்திற்கும் துலாஞ்சலி ஜெயகொடிக்கும் தொடர்புகள் உள்ளனவா, சந்தேக நபர் இது போன்று வேறு எவருக்கும் போலியாக அச்சிடப்பட்ட நாணயத் தாள்களை வழங்கியுள்ளாரா என்பன தொடர்பாக இரண்டு சி. ஐ. டி. குழுக்கள் விசாரணைகளை விரிவாக மேற்கொண்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மேற்படி சம்பவம் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு கொழும்பிலுள்ள பொலிஸ் தலைமையகத்தில் நேற்றுக் காலை இடம்பெற்றது.