ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் பணியில் உள்ள நேட்டோ படைகள் 12 வருடங்களுக்குப் பிறகு தங்களது நாடுகளுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளன. வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி இங்கு அதிபர் தேர்தலும் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் அங்கு தலிபான் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. நேற்று தலைநகர் காபுலில் உள்ள ஒரு விருந்தினர் மாளிகையைத் தாக்கிய தலிபான்கள் அங்கு தங்கியிருந்த நான்கு வெளிநாட்டினரைப் பல மணி நேரங்களுக்கு பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்தனர்.
நான்கு புறமும் சுவர்களால் சூழப்பட்டு ஒரு சிறிய தேவாலயத்தையும் கொண்டிருந்த இந்த இடத்தில் பல மணி நேரம் நீடித்த துப்பாக்கித் தாக்குதல்களின் முடிவில் அந்தத் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது. உள்ளிருந்த வெளிநாட்டினர் அனைவரும் எந்தக் காயமுமின்றி வெளியேற்றப்பட்டனர்.
ஆனால் போராளிகள் உள்ளே நுழையும்போது வெடிகுண்டினை வெடித்து தன்னைத்தானே தகர்த்துக்கொண்ட தீவிரவாதி ஒருவனின் செயலால் அருகிலிருந்த குழந்தை ஒன்று இறந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் முடிவுக்கு வந்ததாகவும், ஐந்து தீவிரவாதிகளும் இறந்துவிட்டதாகவும் ராணுவ வீரர்கள் கமாண்டர் காதம் ஷா ஷகீம் தெரிவித்தார்.
காரில் வெடிகுண்டுகளுடன் வந்த ஒருவனும், உள்ளே நுழைந்த மூன்று தற்கொலைப் படையினரும் வெடிகளை வெடிக்கச் செய்து தங்களை மாய்த்துக்கொண்டதாகவும் மீதமிருந்த ஒரு தீவிரவாதியைத் தாங்கள் சுட்டுக் கொன்றதாகவும் அவர் கூறினார்.
‘ரூட்ஸ் ஆப் பீஸ்’ என்ற அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் அமைப்பின் உறுப்பினர்களே அங்கு தங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.