பழனியில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பஞ்சாமிர்தம் கரைக்க டன் கணக்கில் வாழைத்தார்கள் வரவழைக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
பழனி மலைக்கோயிலின் முக்கிய பிரசாதமாக விளங்குவது பஞ்சாமிர்தம். முருகப்பெருமானுக்கு விருப்பமான இந்த பஞ்சாமிர்தம் தேன்,நெய், கரும்புசர்க்கரை, ஏலக்காய் மற்றும் மலைவாழைப்பழம் கொண்டு தயாரிக்கப்படுகிறது. மலைவாழைப்பழத்தால் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தம் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருப்பதோடு, அதிக சுவை கொண்டதாகவும் இருக்கும். இதனால் தைப்பூசம், பங்குனி உத்திரத் திருவிழாவின் போது பக்தர்கள் கூட்டம் அதிக அளவு மலைவாழைப்பழம் கொள்முதல் செய்து பஞ்சாமிர்தம் தயாரிக்கின்றனர்.
தற்போது பங்குனி உத்திர நாட்களில் நிலவும் கடும் வறட்சியாலும், சூறைக்காற்றாலும் வாழைமரங்கள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளதால் மலைவாழைப்பழத்துக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. பழனி அடிவாரம் அருள்ஜோதி வீதியில் டன் கணக்கில் மலைவாழைப்பழங்கள் விற்பனைக்காக வரவழைக்கப்பட்டுள்ளது.