3
கிறிஸ்தவ தேவாலயங்களில் உள்ள பாட்டுக் குழுக்களில் யுவதிகளை இணைப்பதை தவிர்க்குமாறும் ஆலய கடமைகளில் வயதானவர்களை இணைக்குமாறும் யாழ்.ஆயர் தோமஸ் சவுந்தரநாயகத்திடம் வேண்டுகோள் விடுக்குமாறு யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் டக்ளஸ் தேவானந்தாவிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யாழ்.பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தில் நேற்று நடைபெற்ற போதே இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
யாழ்.சென்பற்றிக்ஸ் கல்லூரிக்கு பின்புறமாக காணப்படும் கிணற்றிலிருந்து கடந்த திங்கட்கிழமை யாழ்.குருநகர் பகுதியைச் சேர்ந்த ஜெரோம் கொன்சலிற்றா (வயது 22) சடலமாக மீட்கப்பட்ட யுவதியின் மரணம் தொடர்பாக சந்தேகம் நிலவுவதாக தாயார் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற அடிப்படையில் இரு மதகுருக்களுக்கு எதிராக நேற்று முன்தினம் யாழ். ஆயர் இல்லத்திற்கு முன்பாக யுவதியின் சடலத்துடன் உறவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நேற்று யாழ். பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றபோது அக்கூட்டத்தில் சமுகமளித்திருந்த மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் யுவதிகளை ஆலயக் கடமைகளில் ஈடுபடுத்த வேண்டாம் என ஆயரிடம் கோரிக்கை விடுக்குமாறு கேட்டுள்ளனர்.
இதேநேரம் எதிர்காலத்தில் தேவாலயங்களில் இளம் பெண்களை பாட்டுக் குழுவிற்கு இணைக்காது, குருமார்கள், கன்னியாஸ்திரிகளை இணைத்து, ஆண்களையும் தாய்மார்களையும் ஆலய கடமைகளில் அமர்த்துமாறு யாழ்.ஆயரிடம் கோரிக்கை விடுக்கவேண்டுமெனவும் மக்கள் கேட்டுக்கொண்டனர்.
இதேவேளை குறித்த யுவதியின் சடலம் மண்டைதீவில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
குறித்த யுவதி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்படவில்லை என மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் யுவதியை குறித்த இரு மதகுருமாரும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கியுள்ளனரென அவருடைய தாயார் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக பூர்வாங்க விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஆனால் யுவதியின் சடலம் மீட்கப்பட்டுள்ள கிணற்றின் சுவர் உடைக்கப்பட்டுள்ளது.