பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து கச்சத்தீவை மீண்டும் இந்தியா பொறுப்பேற்க வேண்டும் என்ற கோரிக்கையை, இந்திய கரையோர காவல்துறையின் பணிப்பாளர் நாயகம் வைஸ் அட்மிரல் அனுரக் ஜி தாப்லியால் நிராகரித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் தாம் கருத்துக்கூற விரும்பவில்லை என்று அவர் இந்திய ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
இது ராஜதந்திர விடயமாகும் எனவே அதற்கு படைத்தரப்பை சேர்ந்த தம்மால் பதில் கூறமுடியாது எனினும் கச்சத்தீவு விடயத்தில் இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாடு தெளிவானது என்று தாப்லியால் தெரிவித்துள்ளார்.
மண்டபத்தில் வைத்து நேற்று செய்தியாளர்களிடம் உரையாற்றிய அவர், கச்சத்தீவில் இலங்கை கடற்படையினர் முகாமை அமைப்பதாக தமக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் கரையோரம் பாதுகாப்பாகவே உள்ளது அத்துடன் இந்தியா எந்தநேரமும் பாதுகாப்பு விடயத்தில் விழிப்பாக இருப்பதாக வைஸ் அட்மிரல் அனுரக் ஜி தாப்லியால் தெரிவித்துள்ளார்.