அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் வசித்துவரும் டாபர் மெக்கல்லம் மற்றும் அவரது மனைவி ஜேன் பாயிண்டர் ஆகிய இருவரும் இணைந்து நடத்திவரும் பாரகன் விண்வெளி வளர்ச்சிக்கழகம் ஒரு தனியார் விண்வெளி நிறுவனம் ஆகும். தங்கள் நிறுவனத்தின்மூலம் வரும் 2021ஆம் ஆண்டில் செவ்வாய்க் கிரகத்திற்கு செல்லும் திட்டத்துடன் இந்தத் தம்பதியர் இதற்கான முன்னேற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.
‘இன்ஸ்பிரேஷன் செவ்வாய்’ என்று அழைக்கப்படும் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான உயிர் காக்கும் அமைப்புகளுக்கான அனைத்து ஆய்வுகளையும் பாரகனின் ஆராய்ச்சிக் குழு வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
செவ்வாய்க் கிரகத்திற்கு செல்லும் குழு உயிர் வாழ்வதற்குத் தேவையான சிறுநீர் மறுசுழற்சி, ஆக்சிஜன் தயாரிப்பு மற்றும் கார்பன் டைஆக்சைடு நீக்கம் போன்றவை இந்தக் குழுவினரால் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இவர்கள் தற்போது அமெரிக்க அரசின் நிதி உதவிக்கும் நாசா விண்வெளிக் கழகத்தின் ஏவுகணைத் தளம் மற்றும் ஓரியன் குழுவின் போக்குவரத்து வாகன உபயோக அனுமதிக்கும் காத்திருக்கின்றனர்.
வரும் 2021ஆம் ஆண்டில் பூமியும், செவ்வாயும் இந்தப் பயணம் எளிதாகும் வகையில் ஒருங்கிணைந்து காணப்படும் என்று விஞ்ஞானத் தகவல்கள் கூறுகின்றன. விண்வெளி சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளும் அமெரிக்க டென்னிஸ் டிட்டோ இந்தப் பயணத்தைத் துரிதப்படுத்தி வருகின்றார்.
திட்டமிட்டபடி அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்றால் செவ்வாய்க் கிரகத்திற்கு செல்லும் முதல் ஜோடி என்ற பெருமையை இந்தத் தம்பதியர் பெறமுடியும். ஏற்கனவே கடந்த 1990களில் பூமியின் மீது கடுமையான விண்வெளி நிலைகளை ஆராய மேற்கொள்ளப்பட்ட பயோஸ்பியர் 2 என்ற சோதனையில் இவர்கள் பங்கு கொண்டிருந்தனர். இந்த முயற்சியில் 1991லிருந்து 1993ஆம் ஆண்டு வரை தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு பிரம்மாண்டமான கண்ணாடி வளைவு அறைக்குள் இந்தத் தம்பதியர் தங்கியிருந்தனர். எனினும் இந்த முயற்சி தோல்வியில் முடிவடைந்தது என்று கூறப்பட்டது.