இராக்கில் கிறிஸ்துவர்கள் வாழ விரும்பினால் அவர்கள் இஸ்லாத்துக்கு மதம் மாற வேண்டும்; அல்லது ‘ஜிஸியா’ எனும் வரி செலுத்த வேண்டும்; இதை இரண்டையும் ஏற்கவில்லையென்றால் எங்கள் வாளுக்கு இரையாக நேரிடும் என்று ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்லாம் நாடாகக் கருதும் பகுதிக்குத் தலைமையேற்றிருக்கும் கிலாஃபத்தான அபு பக்கர் அல் பக்தாதி விடுத்துள்ள அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளபடி, கடந்த சனிக்கிழமை முதல் நடைமுறைக்கு வந்த இந்த எச்சரிக்கை வரும் சனிக்கிழமை வரை அமலில் இருக்கும் என்று கெடு விதிக்கப்பட்டுள்ளது.
அதற்குள் கிறிஸ்தவர்கள் மதம் மாறவோ அல்லது `திம்மா’ ஒப்பந்தம் எனப்படும் இஸ்லாமிய நாட்டில் வாழும் இஸ்லாமியர்கள் அல்லாத மக்களைப் பாதுகாக்க அந்த மக்கள் `கிலாஃபத்’ தலைவரிடம் செலுத்தும் வரியான `ஜிஸியா’ வரியைச் செலுத்தவோ அல்லது நாட்டைவிட்டு வெளியேறவோ முடிவு செய்ய வேண்டும். விதிக்கப்பட்ட கெடு நாளுக்குப் பிறகு இதில் எந்த முடிவையும் தேர்வு செய்யவில்லையெனில், அவர்கள் எங்கள் வாளுக்கு இரையாக நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை மொசூல் நகரில் உள்ள அனைத்து மசூதிகளிலும் படிக்கப்பட்டது. இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள `ஜிஸியா’ வரி செலுத்தும் முறை 7ம் நூற்றாண்டைச் சேர்ந்த மரபாகும். ஆனால் 19-ம் நூற்றாண்டில் ஒட்டோமான் ஆட்சிக் காலத்தில் இந்த வரி செலுத்தும் முறை நீக்கப்பட்டது.
கடந்த மாதம் 5,000 கிறிஸ்தவர்கள் இருந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் நாட்டை விட்டு வெளியேறிவிட, சுமார் 200 கிறிஸ்தவர்கள் மட்டுமே தற்போது மொசூலில் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.