உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட பயணிகள் விமானத்தின் கருப்புப் பெட்டியை ஆய்வுக்காக பிரிட்டனுக்கு அனுப்ப மலேசிய அரசு முடிவு செய்துள்ளது. உக்ரைனின் கிழக்குப் பகுதியில் மலேசிய ஏர்லைன்ஸின் பயணிகள் விமானம் கடந்த 17-ம் தேதி ஏவுகணை வீச்சில் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் பயணம் செய்த 298 பேர் உயிரிழந்தனர்.
சம்பவ இடத்தில் நெதர்லாந்து தலைமையிலான சர்வதேச வல்லுநர்கள் குழு ஆய்வு செய்து வருகிறது. விமானம் விழுந்து நொறுங்கு வதற்கு முந்தைய கடைசி நிமிடம் வரை பைலட்களிடையே நடைபெற்ற உரையாடல்களை பதிவு செய்த கருப்புப் பெட்டியை பிரிட்டன் விமான விபத்து புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைத்து ஆய்வு செய்வது என்று வல்லுநர்கள் குழு முடிவு செய்துள்ளது.