தைவானில் புதன்கிழமை நிகழ்ந்த விமான விபத்தில் 51 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தைவானில் உள்ள கோசியுங் விமான நிலையத்தில் இருந்து, டிரான்ஸ் ஏசியா விமான நிறுவனத்தின் பயணிகள் விமானம் ஒன்று, புதன்கிழமை மாலை புறப்பட்டது. தைவானின் பெங்கு தீவில் உள்ள மகாங் விமான நிலையத்துக்கு வந்தபோது அங்கு மோசமான வானிலை நிலவியது.
அப்போது விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது விமானம் கட்டுப்பாட்டை இழந்து, ஓடுபாதையை விட்டு விலகி, வெளிப்பகுதியில் உள்ள வீடுகள் மீது மோதியது. இந்த விபத்தில் பயணிகள் உள்பட 51 பேர் பலியானார்கள். 7 பேர் காயமடைந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையறிந்ததும் மீட்புக் குழுவினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடுமையாக வீசிய புயல் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று சில ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
விபத்துக்குள்ளான விமானத்தில் 54 பயணிகளும், 4 ஊழியர்களும் இருந்ததாக டிரான்ஸ் ஏசியா ஏர்வேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.