மருத்துவத்துறையில் ஒரு திருப்புமுனையாக, சிக்குன்குனியா காய்ச்சல் வராமல் தடுப்பதற்கான ஊசி மருந்தை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கொசு மூலம் பரவும் வைரஸ் நோயான சிக்குன்குனியாவிலிருந்து இந்தத் தடுப்பூசி மருந்து பாதுகாப்பு அளிக்கும் என அமெரிக்காவிலுள்ள ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்களுக்கான தேசிய ஆராய்ச்சி மையத்தில் (என்ஐஏஐடி) நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
தற்போது இந்தத் தடுப்பூசி மருந்து பரிசோதனை நிலையில் உள்ளது.
மருத்துவப் பரிசோதனைக்கு தாமாக முன்வந்து உட்பட்ட 25 பேருக்கு அதனைச் செலுத்திப் பார்த்ததில், சிக்குன்குனியா நோயை எதிர்ப்பதற்கான சக்தியை அந்த மருந்து உடலில் தூண்டுவது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து இந்த ஆய்வை மேற்கொண்டு வரும் விஞ்ஞானிகள் குழுவைச் சேர்ந்த லெட்ஜர்வுட் கூறுகையில், “”சாதாரண தொற்று நோய்களை எதிர்க்கும் சக்தியைப் போலவே, சிக்குன்குனியாவுக்கும் எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை நமது உடலுக்கு அந்த தடுப்பூசி மருந்து அளிக்கும் என்ற நம்பிக்கை, இந்த ஆய்வின் மூலம் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.