இந்திய ஆன்மீக குருவான ஸ்ரீ சின்மோயின் 80-வது பிறந்தநாளையொட்டி, உலக அமைதிக்காக அவர் 50 ஆண்டுகள் ஆற்றிய பணியை கவுரவிக்கும் வகையில் அவரது சீடர்கள் உலகின் மிக நீளமான பூ மாலையை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.
ஸ்ரீ சின்மோய் மாரத்தான் அணியில் இடம்பெற்றுள்ள பிரான், ஜெர்மனி, கவுதமாலா, இத்தாலி, போர்ச்சுக்கல், ரஷ்யா உள்ளிட்ட 35 நாடுகளின் 170 உறுப்பினர்கள் மற்றும் 30 குழந்தைகள் இணைந்து, 3.46 கி.மீ. நீளமுள்ள இந்த மெகா பூமாலையை உருவாக்கி தங்கள் குருவுக்கு அர்ப்பணித்தனர். இதற்காக பல்வேறு நிறங்கள் கொண்ட ஒரு லட்சத்து 80 ஆயிரம் மலர்களை பயன்படுத்தியுள்ளனர். இந்த பூமாலை கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்ரீ சின்மோயின் சீடரும், அதிக கின்னஸ் சாதனைகள் படைத்தவருமான பர்மேன் இதுபற்றி கூறுகையில், தங்கள் குருவுக்கு நன்றிக்கடன் செலுத்தும் வகையில், அவரது 80-வது பிறந்தநாளில் ஏதாவது சிறப்பாக செய்ய விரும்பியதாகவும், இதற்காக 35 நாடுகளின் சீடர்கள் இந்த பூமாலை மூலமாக இணைந்தது பெரிய விஷயம் என்றும் தெரிவித்தார்.
மேலும், குருவின் பிறந்தநாளான ஆகஸ்ட் 27-ம் தேதி உலகம் முழுவதிலும் உள்ள அவரது சீடர்கள் நியூயார்க்கில் திரண்டு கச்சேரி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினர்.