இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்-டயானா தம்பதியரின் இளைய மகன் இளவரசர் ஹாரி. இவர் வரும் 15-ந் தேதி தனது 30-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவரது சுயசரிதையை பத்திரிகையாளரும், இங்கிலாந்து அரச வம்சத்தை சேர்ந்தவர்களின் சுயசரிதையை எழுதி பிரபலமானவருமான பென்னி ஜூனர் எழுதி உள்ளார். இந்தப் புத்தகத்தின் பெயர் இளவரசர் ‘ஹாரி: சகோதரர், வீரர், மகன்’ என்பதாகும்.
இந்தப் புத்தகத்தில் டயானா பற்றிய பல திடுக்கிடும் தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அவை வருமாறு:-
டயானா தனது பிள்ளைகள் வில்லியம், ஹாரி மீது கொண்ட அன்பு, ஆட்டிப்படைக்கிற அளவில், தனக்கே சொந்தமானவர்கள் என்று கருதுகிற வகையில் அமைந்திருந்தது. ‘உங்களை அதிகமாக நேசிப்பது யார்?’ என்று அடிக்கடி பிள்ளைகளை நோக்கி அவர் கேட்பார். வில்லியம், ஹாரி ஆகியோரை வளர்ப்பதற்கு பல்வேறு பணிப்பெண்கள் அமர்த்தப்பட்டிருந்த நிலையில், அவர்கள் குழந்தைகளோடு நெருங்கிப்பழகி, உணர்வுப்பூர்வமாக ஒன்றி விடுவார்களேயானால், அவர்களை டயானா வேலையை விட்டு நீக்கி விடுவார். இப்படி பலரை நீக்கி இருக்கிறார்.
உண்மையான பிரச்சினை என்னவென்றால், டயானாவுக்கு அவரது அம்மா, தாயாக ஒரு போதும் நடந்துகொண்டதில்லை. எனவேதான் டயானாவுக்கும், அவரது பிள்ளைகளுக்கு ஒரு உண்மையான தாயாக நடந்துகொள்ளத் தெரியவில்லை. வில்லியம், ஹாரிக்கு அவர் ஒரு மூத்த சகோதரிபோலத்தான் நடந்துகொண்டார்.
சில சமயம், அவர்களை வளர்த்து வந்த பணிப்பெண்கள், வில்லியம், ஹாரியுடன் டயானாவையும் சேர்த்து 3 குழந்தைகளை பராமரிக்க வேண்டி இருப்பதாகவே கருதினர்.
இளவரசர் சார்லசின் மனைவியான கமிலா பார்க்கருக்கு டயானா கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். கமிலா வீட்டில் தனிமையில் இருந்தபோது, நள்ளிரவு நேரத்தில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, “நான் உன்னை கொலை செய்ய ஒருவரை அனுப்பி உள்ளேன். அவர்கள் உன் தோட்டத்திற்கு வெளியே நிற்கிறார்கள் பார். ஜன்னலுக்கு வெளியே பார். நீ அவர்களைப் பார்க்கிறாயா?” என்றெல்லாம் கேட்டு மிரட்டி இருக்கிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.