அமெரிக்காவில், இந்தியாவைச் சேர்ந்த பள்ளி மாணவியை பள்ளிக்கு சென்று கைது செய்து, 28 மணி நேரம் விலங்கிட்டு சிறையில் அடைத்திருந்த நியூயார்க் போலீசை எதிர்த்து, அந்த மாணவி தொடர்ந்த வழக்கில், நியூயார்க் போலீசின் செயல் தவறு என, தெரிந்ததை அடுத்து, இந்திய மாணவிக்கு, 1.5 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டு, வழக்கு பைசல் செய்யப்பட்டது.கடந்த 2011ல், நியூயார்க் நகர பள்ளி ஒன்றில், கார்த்திகா பிஸ்வாஸ் என்ற இந்திய துாதரக அதிகாரியின் மகள் படித்து வந்தார். பள்ளி ஆசிரியை ஒருவருக்கு, கார்த்திகா பெயரை குறிப்பிட்டு, யாரோ ஆபாச, ‘இ – மெயில்’ அனுப்பி இருந்தனர். அது குறித்து, ஆசிரியை அளித்த புகாரின் படி, திடீரென பள்ளிக்குள் நுழைந்த போலீசார், கார்த்திகாவை இழுத்துச் சென்றனர்.
சிறுமி என்றும் பாராமல், அவருக்கு கைவிலங்கிட்டு, சிறைக்கு அழைத்துச் சென்று, கைதிகள் அடைக்கப்படும் அறையில் அடைத்து, 28 மணி நேரத்திற்கு பிறகு தான், அவரின் பெற்றோரை சந்திக்க அனுமதித்தனர்.
விசாரணையில், கார்த்திகாவுக்கும், அந்த ஆபாச இ – மெயிலுக்கும் சம்பந்தமில்லை என்பது தெரிய வந்தது. இதையடுத்து, தன்னை கைது செய்து, பள்ளியில் இருந்து, ‘சஸ்பெண்ட்’ செய்ய வைத்த, நியூயார்க் போலீசாருக்கு எதிராக, மாணவி கார்த்திகா, அமெரிக்க கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். 10 கோடி ரூபாய் இழப்பீடு தர வேண்டும் என,முறையிட்டார்.இந்த வழக்கில், நியூயார்க் போலீஸ் தரப்பில் தவறு இருந்தது கண்டறியப்பட்டதால், வழக்கை சமரசமாக முடிக்க பேச்சு நடந்தது. இதில் கார்த்திகாவுக்கு, 1.5 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க முடிவானது. அது போல், அவர் தொடர்ந்திருந்த வழக்குகளை வாபஸ் பெறவும் முடிவானது.இதற்கான உடன்பாட்டில், ‘மாணவி கார்த்திகாவை கைது செய்தது தவறான முடிவு; அதற்காக வருந்துகிறோம்’ என, நியூயார்க் போலீஸ் தெரிவித்தது.
கைது செய்யப்பட்டு விடுதலையானதும் கார்த்திகா, இந்தியா திரும்பிவிட்டார்; இந்தியாவில் இப்போது படித்து வருகிறார்.
1