ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அகரஹாரா சிறையில் 23-ஆம் அறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு கைதி எண்.7402 என்ற எண் கொடுக்கப்பட்டுள்ளது.
முதல் நாளான நேற்று முன்தினம் காலை 5.30 மணிக்கு எழுந்த அவர் எலுமிச்சை சாறு கலந்த தண்ணீர் குடித்து விட்டு நடை பயிற்சி செய்தார். பிறகு அவர் உதவியாளர் வீர பெருமாள் என்பவர் வெளியில் இருந்து வாங்கி வந்த இட்லி-வடை சாப்பிட்டார். இதையடுத்து அவர் படிக்க 2 ஆங்கில நாளிதழும், 3 தமிழ் நாளிதழும் கொடுக்கப்பட்டது. மதியம் உணவு சாப்பிட்டு விட்டு ஓய்வு எடுத்த ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை என்பதால் சிறை விதிப்படி யாரையும் சந்தித்து பேச முடியவில்லை.
அவர் அடைக்கப்பட்டுள்ள, அறை 12க்கு 18 அடி சுற்றளவே கொண்டது. இது ஜெயலலிதாவுக்கு கடும் அவதியை ஏற்படுத்தியது. நேற்று முன் தினம் மாலை ஜெயலலிதாவுக்கு திடீரென சற்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர் சிறை ஊழியர்களிடம் தனக்கு சக்கரை அளவு அதிகரித்து விட்டதாக தெரிவித்தார்.
இதையடுத்து அவர் ஜெயில் வளாகத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சர்க்கரை அளவு பரிசோதிக்கப்பட்டது. பிறகு டாக்டர்கள், ஜெயலலிதா உடல் நிலை திருப்தி கரமாக இருப்பதாக தெரிவித்தனர். சிகிச்சை பெற்ற சிறிது நேரத்தில் ஜெயலலிதா மீண்டும் அவரது அறைக்கு அழைத்து வரப்பட்டார்.