இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளின் பிடியில் உள்ள அமெரிக்க பிணைக்கைதி பீட்டர் காஸிக் (26) முஸ்லிமாக மதம் மாறியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
சில நாள்களுக்கு முன்னர், பிரிட்டனைச் சேர்ந்த ஆலன் ஹென்னிங் என்பவர் தலையை ஐ.எஸ். பயங்கரவாதிகள் துண்டித்ததைக் காட்டும் விடியோவை வெளியிட்டனர். அதன் இறுதியில், தங்கள் வசமுள்ள பீட்டர் காஸிக் என்கிற அமெரிக்கர் அடுத்ததாக கொல்லப்படுவார் என கூறப்பட்டிருந்தது.
பீட்டர் காஸிக் அமெரிக்க ராணுவத்திலிருந்து உடல் நிலை காரணமாக விலகியவர். இவர் தனது பெற்றோர்களுக்கு கடந்த ஜூன் மாதம் ஒரு கடிதம் எழுதினார். அதில் சில பகுதிகளை அவரது பெற்றோர்கள் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை காண்பித்தனர்.
ஐ.எஸ். பிடியில் இருக்கும்போது தான் உயிரிழப்பதற்கு அவர் அச்சம் தெரிவித்திருப்பது அக்கடிதத்திலிருந்து தெரிய வருகிறது.
சிரியாவைச் சேர்ந்த வேறொருவருடன் ஒரே அறையில் அவர் அடைக்கப்பட்டிருந்தார். இதையடுத்து, அவர் சென்ற ஆண்டு முஸ்லிமாக மதம் மாறியுள்ளதைக் குறிப்பிட்டு, தனது பெயரை அப்துல் ரஹ்மான் என மாற்றிக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
தினமும் 5 வேளை தொழுகை நடத்துவதாகவும், கடந்த ஆண்டு ரமலான் நோன்பு மேற்கொண்டதாகவும் எழுதியுள்ளார்.
“சாவு குறித்து எனக்கு அச்சம் இருக்கிறது. இங்கிருந்து விடுபடுவேன் என்ற எண்ணத்தில் நம்பிக்கை வைக்க வேண்டுமா என்று கூட எனக்குத் தெரியவில்லை. அவதிப்படுபவர்களுக்கு உதவிபுரியச் சென்றபோது எனக்கு இந்த முடிவு நேர்ந்தது என்று நான் திருப்தி அடைவேன்’ என்று அவர் எழுதியுள்ளார்.