நேபாளத்தின் வடக்குப் பகுதியிலுள்ள மலை ஒன்றில் ஏற்பட்ட பனிச் சரிவில் சிக்கி, இந்தியர் உள்பட 12 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.
தலைநகர் காத்மாண்டுக்கு வடமேற்கே 400 கி.மீ. தொலைவில், 5,416 அடி உயரத்தில் செவ்வாய்க்கிழமை இந்தப் பனிச் சரிவு ஏற்பட்டது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: மனாங் மாவட்டத்தில் ஏற்பட்ட பனிச் சரிவால் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த இந்தியர் ஒருவர் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.
மேலும், மஸ்தாங் மாவட்டம் தோரங் கணவாய் அருகே பனிச் சரிவில் சிக்கி நான்கு வெளிநாட்டவர்கள் உயிரிழந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மனாங் மாவட்டத்தில் உயிரிழந்தவர்களில், கனடா நாட்டைச் சேர்ந்த 4 பேர், மூன்று நேபாளிகள் அடங்குவர்.
தோரங் கணவாய் அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் போலந்து நாட்டைச் சேர்ந்த இருவர், இஸ்ரேலியர் ஒருவர், நேபாளத்தைச் சேர்ந்த அவர்களது வழிகாட்டி ஆகியோர் உயிரிழந்தனர்.