இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே 26 ஆண்டுகளாக நடந்த உள்நாட்டுப்போர் 2009-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. போர் உச்சக்கட்டம் அடைந்தபோது, சுமார் 40 ஆயிரம் அப்பாவி தமிழ்மக்களை சிங்கள ராணுவம் கொன்று குவித்தது. இது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எண்ணிலடங்கா மனித உரிமை மீறல்களும் இலங்கையில் நடைபெற்றன.
இதுதொடர்பான காட்சிகளை இங்கிலாந்து டெலிவிஷன் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து இலங்கை போர் குற்றங்கள் தொடர்பாக ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் விவாதம் நடத்தி, ஓட்டெடுப்புக்கு விட்டது. தீர்மானம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து சர்வதேச விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. விசாரணை குழுவும் அமைக்கப்பட்டது.
ஆனால் இந்த சர்வதேச விசாரணையை ஏற்க முடியாது என இலங்கை அதிபர் ராஜபக்சே உறுதியாகக் கூறிவிட்டார். இலங்கை ஒத்துழைப்பு அளிக்காது எனவும் அவர் அறிவித்து விட்டார்.
இந்த நிலையில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் ஆணையரான ஜோர்டான் இளவரசர் ஜெய்து அல் உசேன் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் இலங்கை அரசை சரமாரியாக குற்றம் சாட்டி உள்ளார். அந்த அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை கவுன்சில் வெளிப்படையாகவே வேண்டுகோள் விடுத்தது. ஆனால் அதை ஏற்க இலங்கை அரசு மறுத்து விட்டது.
விசாரணை குழு தொடர்பாக இலங்கை அரசு (மக்களிடம்) அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இது, சாட்சியம் அளிக்க மக்களை வரவிடாமல் தடுக்கும் என்று சந்தேகத்துக்கு இடமின்றி கூற முடிகிறது.
விசாரணைக்கு ஒத்துழைக்க இலங்கை மறுத்திருக்கக்கூடாது. இது அரசின் நேர்மையில் சந்தேகத்தை எழுப்புகிறது. மறைப்பதற்கு ஏதும் இல்லை என்றால் இலங்கை அரசு இந்த விசாரணையை கெடுக்கிற அளவுக்கு ஏன் செல்ல வேண்டும்?
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
ஆனால் இலங்கை அரசு இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளது.