சீனா, ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் சர்வதேச மாநாடுகளில் கலந்து கொள்ள வுள்ள ரஷிய அதிபர் புதினும் அமெரிக்க அதிபர் ஒபாமாவும் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்துவர் என ரஷிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாடு, சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் அடுத்த வாரம் நடைபெறவிருக்கிறது.
அதையடுத்து, ஆஸ்திரேலியாவில், ஜி-20 மாநாடு நடைபெறுகிறது. இவ்விரு மாநாடுகளிலும் ரஷிய அதிபர் விளாதிமிர் புதின், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கலந்து கொள்கின்றனர்.
இந்த இரு நிகழ்ச்சிகளின்போதும், இரு அதிபர்களும் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பேச்சுகள் அதிகாரபூர்வமற்றவையாக இருக்கும் என புதினின் வெளிநாட்டுத் துறை விவகார ஆலோசகர் யூரி உஷகோவ், மாஸ்கோவில் சனிக்கிழமை கூறினார்.
இது போன்ற சந்தர்ப்பங்களை புதின் தட்டிக் கழிப்பதில்லை எனவும் அவற்றை வரவேற்கும் குணமுள்ளவர் என்றும் உஷகோவ் மேலும் கூறினார்.
இந்நிலையில், அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் இது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூஸன் ரைஸ், இரு அதிபர்களும் சந்தித்துப் பேசுவது குறித்து முறையான ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை என்றார்.