உலகம் முழுவதும் பிரபலங்கள் பயன்படுத்திய பொருட்கள் அவ்வப்போது ஏலம் விடப்படும். இந்த பொருட்களை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதால், இந்த பொருட்கள் அதிக விலைக்கு ஏலம் போகும். அந்த வகையில் இங்கிலாந்து பாடகர் வாசித்த கிதார் ஒன்று ரூ.6 கோடி வரை ஏலத்துக்கு போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்தில் பாடகர், பாடல் ஆசிரியர் மற்றும் இசையமைப்பாளர் என பல துறைகளில் சிறந்து விளங்கிய ஜான் லெனான், கடந்த 1980-ம் ஆண்டு மரணமடைந்தார். இசையுலகில் மிகவும் புகழ்பெற்று விளங்கிய பீட்டில்ஸ் இசைக்குழுவில் ஒருவரான இவர், கடந்த 1967-ம் ஆண்டு நடந்த ஒரு பாடல் ஒலிப்பதிவின் போது கிரட்ஸ் ரக கிதாரை வாசித்தார்.
ஒரு ஆண்டுக்குப்பின் இந்த கிதாரை தனது உறவினர் ஒருவருக்கு அவர் வழங்கினார். இந்த கிதாரை லண்டனை சேர்ந்த ஏல நிறுவனம் ஒன்று, ஏலத்தில் விட முடிவு செய்துள்ளது. ஜான் லெனான் பயன்படுத்திய முக்கியமான கிதார்களில், இந்த கிரட்ஸ் கிதாரும் ஒன்று என்பதால், இது 1 மில்லியன் டாலர் (சுமார் ரூ.6 கோடி) வரை ஏலம் போகும் என ஏல நிறுவனம் தெரிவித்து உள்ளது.