பிணைக் கைதிகள் விவகாரத்தைக் கையாள்வது தொடர்பான அமெரிக்கக் கொள்கையில் மாற்றம் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்குமாறு அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.
பிணைக் கைதிகளை விடுவிப்பதற்காக, கடத்தல்காரர்களுக்கு பிணைத் தொகை உள்ளிட்ட எவ்வித சலுகையும் வழங்கக் கூடாது என்ற கொள்கையை அமெரிக்கா கடைப்பிடித்து வருகிறது.
கடத்தல்காரர்களின் மிரட்டலுக்கு அடிபணிந்தால், அது மேலும் பல கடத்தல்களுக்கு ஊக்கமளிக்கும் என்பது அமெரிக்காவின் நிலைப்பாடு.
இந்நிலையில், அண்மைக் காலமாக மேற்கு ஆசியாவில் அமெரிக்க பிணைக் கைதிகள் கொல்லப்படுவது அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, இந்தக் கொள்கையை மறுபரிசீலனை செய்யுமாறு அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் (கொள்கை) கிறிஸ்டீன் வார்மத் தெரிவித்துள்ளார்.
பிணைக் கைதிகள் தொடர்பான கொள்கையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி வரும் குடியரசுக் கட்சி எம்.பி. டங்கன் ஹன்டருக்கு அவர் கடந்த வாரம் எழுதிய கடிதத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அந்தக் கடிதத்தில் கிறிஸ்டீன் வார்மத் தெரிவித்துள்ளதாவது:
வெளிநாடுகளில் அமெரிக்கர்கள் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. மேலும் அண்மைக் காலமாக, குறிப்பிட்ட சில பயங்கரவாத அமைப்புகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
எனவே, வெளிநாடுகளில் பயங்கரவாதிகளால் அமெரிக்கர்கள் கடத்திச் செல்லப்படும் விவகாரத்தில் தற்போதுள்ள அரசின் கொள்கையை மறு பரிசீலனை செய்யுமாறு அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தைக் கையாள்வதில் அரசு அமைப்புகளிடையே நிலவும் வேறுபாடுகளைக் களையும் விதத்தில் அந்தக் கொள்கை மாற்றம் இருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார் என்று அந்தக் கடிதத்தில் கிறிஸ்டீன் வார்மத் குறிப்பிட்டுள்ளார்.