இலங்கை அதிபர் தேர்தலில், ராஜபட்சவை எதிர்த்துப் போட்டியிடும் முக்கிய வேட்பாளரும், முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சருமான மைத்ரிபால சிறீசேனா, எதிர்க்கட்சிகளுடன் திங்கள்கிழமை ஒப்பந்தம் செய்து கொண்டார்.
இலங்கை அதிபர் பதவிக்கு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில், அதிபர் ராஜபட்ச 3ஆவது முறையாக அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
அவரை எதிர்த்து, ராஜபட்ச அரசில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவரும், ராஜபட்ச அரசில் 2ஆம் நிலை தலைவருமான ஸ்ரீலங்கா சுதந்திரா கட்சியின் பொதுச் செயலாளர் மைத்ரிபால சிறீசேனா போட்டியிடுகிறார். தேர்தலில், ராஜபட்சவை எதிர்த்துப் போட்டியிடுவதற்காக கடந்த 21ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை அவர் ராஜிநாமா செய்தார்.
இந்நிலையில், கொழும்பில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், புத்த மத மூத்த துறவி மதுலுவாவே சோபிதா, முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கே மற்றும் பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களுடன் சிறீசேனா ஒப்பந்தம் செய்து கொண்டார். இந்நிகழ்ச்சியில், முன்னாள் அதிபர் சந்திரிகா பண்டாரநாயகே குமாரதுங்காவும் கலந்து கொண்டார்.