வரும் 2020ம் ஆண்டிற்குள், உலகின் மிக நீளமான, மெட்ரோ ரயில் போக்குவரத்து உள்ள நாடு என்ற சிறப்பை பெற, சீனா வரிந்து கட்டி வேலை செய்து வருகிறது.
இதற்காக, 8,500 கி.மீ., நீள சுரங்க ரயில் பாதைகள் அமைக்கப்பட உள்ளன. தற்போது, 19 நகரங்களில் மெட்ரோ ரயில் போக்குவரத்தை நீட்டிக்கும் பணிகள், முடியும் நிலையில் உள்ளன. இதையடுத்து, இம்மாத இறுதிக்குள், சீனாவின் மெட்ரோ ரயில் பாதையின் நீளம், 3,000 கி.மீ., உயரும். சீனாவில், போக்குவரத்து நெரிசலுக்கு, சுரங்கப்பாதைகள் வழியே அமைக்கப்படும் மெட்ரோ ரயில், நல்ல தீர்வாக உள்ளது.
தலைநகர் பீஜிங்கில், இம்மாதம், நான்கு புதிய சுரங்கங்களில் மெட்ரோ ரயில் போக்குவரத்து துவங்க உள்ளது. இதன் மூலம், 527 கி.மீ., சுரங்கப்பாதையில், ரயில் போக்குவரத்து நடக்கும், முதல் நகராக, பீஜிங் உருவெடுக்கும். தற்போது, இந்த பெருமை, ஷாங்காய் மெட்ரோ ரயில் போக்குவரத்துக்கு உள்ளது. புதிய வசதி மூலம், தினமும் பீஜிங் நகர மெட்ரோ ரயிலில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை, ஒரு கோடியை தாண்டும் என, பீஜிங் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்தாண்டு ஏப்ரல் நிலவரப்படி, 55 நாடுகளில், 168 மெட்ரோ ரயில் போக்குவரத்து உள்ளது. உலகில், முதன் முதலாக லண்டன் நகரில், 1863ம் ஆண்டு, சுரங்க ரயில் போக்குவரத்து துவங்கியது. அதில், 1890ம் ஆண்டு முதல் மின்சார ரயில்கள் இயங்கத் துவங்கின.