எபோலா நோய் தடுப்புக்காக உருவாக்கப்பட்ட மருந்து பாதுகாப்பானது என, ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் நடத்திய முதல் கட்ட சோதனையில் தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவின் தேசிய தொற்று நோய் அறிவியல் மையம் சார்பில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக அந்த சோதனையை நடத்திய குழுவின் தலைமை மருத்துவர் ஜூலி தெட்ஜர்வுட் வாஷிங்டனில் செவ்வாய்க்கிழமை கூறினார். இதுபோன்ற சோதனை ஆப்பிரிக்க நாட்டில் நடப்பது இதுவே முதல் முறை என அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், எபோலா நோய் தடுப்பு சிகிச்சையில் ஈடுபட்டுள்ளோருக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கும் உடை உருவாக்கப்பட்டுள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் 19,000 பேருக்கு மேல் எபோலா நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 7,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து, சிகிச்சையில் ஈடுபட்டுள்ளவரையும் நோய் தாக்கும் அபாயம் உள்ளதால், பாதுகாப்பு உடை பயன்படுத்தப்படுகிறது. அப்படியிருந்தும், இந்த மாத தொடக்க அளவில் உலகெங்கும் மருத்துவர்கள் உள்ளிட்ட 639 சுகாதாரப் பணியாளர்கள் எபோலா நோயால் பாதிக்கப்பட்டனர். இதில் 349 பேர் உயிரிழந்தனர்.
சிகிச்சையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கும் வகையிலான உடையை உருவாக்க பல்வேறு ஆராய்ச்சிக் கூடங்கள் முயற்சியெடுத்து வருகின்றன.
இந்நிலையில், அமெரிக்காவின் புகழ்பெற்ற ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் புதிய பாதுகாப்பு உடையை உருவாக்கியுள்ளனர்.
இதை அணிந்திருப்பவரின் உடலைக் குளுமையாக வைத்திருப்பது இதன் சிறப்பம்சங்களுள் ஒன்று. இந்தத் தொழில்நுட்பத்தை உருவாக்கியவர் ஹரிகிருஷ்ணா தந்திரி எனும் இந்திய வம்சாவளி மருத்துவர்.