இலங்கையில் வரும் ஜனவரி 8-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது அதிபராக உள்ள மகிந்த ராஜபக்சே மூன்றாவது முறையாக பதவியைப்பிடிக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். தமிழர்களின் வாக்குகளைப் பெறுவதற்கான முயற்சியிலும் இறங்கியுள்ளார். ஆளும் கூட்டணி சார்பில் போட்டியிடும் ராஜபக்சேவை எதிர்த்து, அவரது மந்திரிசபையில் சுகாதாரத்துறை மந்திரியாக பொறுப்பு வகித்த மைத்ரிபாலா சிறீசேனா பொது வேட்பாளராக களமிறங்கி பிரச்சாரம் செய்து வருகிறார். அவருக்கு ஆதரவு பெருகி வரும் நிலையில், ராஜபக்சே தமிழர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக வாக்குறுதிகளை அளித்து வருகிறார்.
இந்நிலையில், இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் தங்கள் ஒவ்வொரு வாக்கினையும் கவனமாக பயன்படுத்த வேண்டும் என்று இங்கிலாந்தில் செல்வாக்குமிக்க புலம்பெயர் தமிழர்கள் அமைப்பான உலகத் தமிழ் பேரவை கேட்டுக்கொண்டுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கை உள்ளூர் ஊடகத்தில் வெளியாகி உள்ளது. அதில், “சுதந்திரத்திற்கு பிந்தைய இலங்கையில், பேரினவாத தேர்தல் முறைகளால் தமிழ் மக்கள் தங்கள் உரிமையை தொடர்ந்து இழந்ததை உலகத் தமிழர் பேரமைப்பு நன்கு அறியும். இலங்கை தனது போக்கில் இருந்து இனியாவது தன்னை மாற்றிக்கொள்ளுமா? என்ற கேள்வி வாக்காளர்களிடையே உள்ளது. எனவே, ஒவ்வொருவரும் தங்கள் வாக்குகளை மிக நிதானமாக பயன்படுத்த வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதேபோல் நேற்று விடுத்த அறிக்கையில் தமிழர்கள் தங்கள் மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.