பெற்றோர் வாங்கிக் கொடுத்த சைக்கிளை ஆலயத்திற்குக் கொண்டு சென்ற சமயம் அது திருட்டுப் போனதால் மன உளைச்சல் அடைந்த மாணவி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
இந்த சம்பவம் சாவகச்சேரி – மட்டுவில் வடக்குப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் உயர்தரம் பயிலும் 17 வயதுடைய மாணவியே இவ்வாறு நஞ்சருந்தி சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
வறுமையிலும் தமது மகளை கற்பிக்கும் எண்ணத்துடன் புதிய சைக்கிள் ஒன்றை பெற்றோர் வாங்கிக் கொடுத்தனர். மாணவி ஆசையாக அந்தச் சைக்கிளை பெற்று பாடசாலைக்கு சென்று வந்தார். கடந்த சனிக்கிழமை குறித்த மாணவி திருவெம்பாவை பூசைக்காக அருகிலுள்ள ஆலயத்திற்குச் சென்ற சமயம் அவரது சைக்கிளை திருடர்கள் திருடிச் சென்றுவிட்டனர்.
இதனால் மன உளைச்சல் அடைந்த மாணவி வீட்டு வந்து நஞ்சருந்தி உயிரை மாய்க்க எண்ணியுள்ளார். இதனை அவதானித்த பெற்றோர் மாணவியை உடனடியாக வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர். இந்தநிலையில் அவர் காப்பாற்றப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.