இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடும் ராஜபக் ஷேவுக்கு ஆதரவாக, பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானும், நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசும், நேற்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
இலங்கை அதிபர் தேர்தல், அடுத்த மாதம், 8ல், நடக்கிறது. ஆளும், இலங்கை சுதந்திரா கட்சி சார்பில், தற்போதைய அதிபர் ராஜபக் ஷே போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து, எதிர்க்கட்சி கூட்டணி சார்பில், மைத்ரிபாலா ஸ்ரீசேனா போட்டிடுகிறார்.
இவர், ராஜபக் ஷே அமைச்சரவையில் அமைச்சராக இருந்து, ராஜினாமா செய்தவர். இந்த தேர்தலில், ராஜபக் ஷேவுக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில், தன் பிரசார யுக்தியை ராஜபக் ஷே தீவிரப்படுத்திஉள்ளார். அதிபர் பதவியை தக்க வைப்பதற்காக, சினிமா நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள் போன்றவர்களை, தனக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடுத்தி வருகிறார்.
இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானும், நேற்று கொழும்பில், ராஜபக் ஷேவுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டார். இவருடன், ‘கிக்’ படத்தில் இணைந்து நடித்தவரும், மிஸ் இலங்கை பட்டம் பெற்றவருமான ஜாக்குலின் பெர்னாண்டசும், பிரசாரத்தில் ஈடுபட்டார். ராஜபக் ஷே மகன் நமல் ராஜபக் ஷே, தீவிரமான சினிமா ரசிகர். இவருக்கும், சல்மான் கானுக்கும் நெருங்கிய நட்பு உண்டு.
இதன் அடிப்படையிலேயே, ராஜபக் ஷேவுக்கு ஆதரவாக, சல்மான் கான் பிரசாரம் செய்ததாக கூறப்படுகிறது. பா.ஜ.,வின் சமூக வலைதள பிரசாரத்தின் குருவாக கருதப்படும் அரவிந்த் குப்தாவும், ராஜபக் ஷேயின் சமூக வலைதள பிரசாரத்துக்கு உதவி செய்து வருகிறார்.