இலங்கை அதிபர் தேர்தலில், ராஜபக் ஷேயை எதிர்த்துப் போட்டியிடும், மைத்ரி பாலா ஸ்ரீசேனாவுக்கு, தமிழ் தேசிய கூட்டணி ஆதரவு தெரிவித்துள்ளது.
இலங்கையில், அடுத்த மாதம் 8ம் தேதி, அதிபர் தேர்தல் நடக்கிறது. இதில், ஆளும் இலங்கை சுதந்திரா கட்சி சார்பில், தற்போதைய அதிபர் ராஜபக் ஷே போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, எதிர்க்கட்சி கூட்டணி சார்பில், மைத்ரி பாலா ஸ்ரீசேனா போட்டியிடுகிறார். இவர் அதிபர் ராஜபக் ஷே அமைச்சர வையில், ஏற்கனவே இடம் பெற்றிருந்தவர்.இந்நிலையில், இலங்கை தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர், ராஜவாயோதி சம்பந்தன் கூறியதாவது: இலங்கையில், 30 ஆண்டுகளாக நீடித்த உள்நாட்டுப் போர், 2009ல் முடிவுக்கு வந்தது. ஆனாலும், நீண்ட நாட்களாக நிலவும் இனப்பிரச்னைக்கு தீர்வு காண, அதிபர் ராஜபக் ஷே தவறி விட்டார்.
எனவே, அதிபர் தேர்தலில், எதிர்க்கட்சி கூட்டணி வேட்பாளரான, மைத்ரி பாலா ஸ்ரீசேனாவை ஆதரிக்க, தமிழ் தேசிய கூட்டணி முடிவு செய்துள்ளது. அவருக்கு எங்களின் முழு ஆதரவு உண்டு. இவ்வாறு, சம்பந்தன் கூறினார். இலங்கையின் பிரதான முஸ்லிம் கட்சியான, இலங்கை முஸ்லிம் காங்., சமீபத்தில், ஸ்ரீசேனாவுக்கு ஆதரவு தெரிவித்தது. இந்நிலையில், தமிழ் தேசிய கூட்டணியும் ஆதரவு தெரிவித்துள்ளதால், அதிபர் தேர்தலில் ராஜபக் ஷே, கடும் எதிர்ப்பை சந்திக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
சல்மானுக்கு வேண்டுகோள்: ‘ராஜபக் ஷேக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடுவது, இலங்கை அரசியலில் தலையிடுவதில் இருந்து, பாலிவுட் நடிகர் சல்மான் கான் விலகி இருக்க வேண்டும்’ என, இலங்கையைச் சேர்ந்த நடிகரும், அரசியல்வாதியுமான ரஞ்சன் ராமநாயகே வலியுறுத்தி உள்ளார்.
இலங்கையில், எதிர்க்கட்சி கூட்டணி சார்பில், எம்.பி., வேட்பாளராக போட்டியிடும், ரஞ்சன் ராமநாயகே சமூக வலைதளத்தில் கூறியுள்ளதாவது: இலங்கையில் மிகவும் பிரபலமானவர், சல்மான் கான்; அவரின் ரசிகன் நான். அப்படிப்பட்ட சல்மான் கான், ராஜபக் ஷே போன்ற ஊழல் அரசியல்வாதிகளுக்கு ஆதரவாக, பிரசாரத்தில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும். உடனடியாக இந்தியாவுக்கு திரும்ப வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்து உள்ளார்.