ராணுவ கலகம் மற்றும் நெருக்கடி நிலை பிரகடனத்தின் மூலம் தனது ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள ராஜபக்சே தீட்டிய சதி பற்றி விசாரிப்பதே எங்களின் முதல் வேலையாக இருக்கும் என மைத்ரிபாலா சிறிசேனா தலைமையிலான இலங்கை அரசு இன்று அறிவித்துள்ளது.
இலங்கையில் கடந்த 8–ந்தேதி அதிபர் தேர்தல் நடந்தது. ஓட்டுபதிவு முடிந்த அன்றே இரவு ஓட்டு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்றது.
தேர்தலில் வெற்றி பெற்று 3–வது தடவையாக அதிபராகலாம் என கனவில் இருந்த ராஜபக்சேவுக்கு முடிவுகள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் வரத் தொடங்கின. எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்ரிபாலா சிறிசேனா தொடர்ந்து முன்னிலையில் இருந்தார்.
ஓட்டு எண்ணிக்கை இறுதி கட்டத்தை நெருங்கும் நிலையில் தான் இனி வெற்றி பெற வாய்ப்பே இல்லை என ராஜபக்சேவுக்கு தெரிந்து விட்டது. தனது தோல்வியை அவரால் தாங்கி கொள்ள முடியவில்லை.
கடும் அதிர்ச்சி அடைந்த அவர் தனது குடும்பத்தினரை ஜனாதிபதி மாளிகையில் இருந்து வெளியேற்றி பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி வைத்தார்.
தனது ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்து கொள்ள உயர் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார். இலங்கையில் நெருக்கடி நிலையை பிரகடனம் செய்ய முடிவு செய்தார். அதற்கு அட்டார்னி ஜெனரல் மறுத்து விட்டார்.
இறுதியாக ராணுவத்தின் மூலம் புரட்சி செய்து ஆட்சியை தக்க வைத்து கொள்ள திட்டமிட்டார். அதற்காக ராணுவ தலைமை தளபதி லெப்டினென்ட் ஜெனரல் தயா ரத்னாயகேவின் உதவியை நாடினார். ஆனால் அதற்கு அவர் ஒப்புக் கொள்ளவில்லை.
எந்தவிதமான சட்ட விரோத நடவடிக்கைகளிலும் ஈடுபட முடியாது என மறுத்து விட்டார். அதனால் தேர்தலை ரத்து செய்யவோ, ராணுவம் மூலம் ஆட்சியை பிடிக்கவோ ராஜபக்சேவால் முடியவில்லை.
இதுபற்றிய தகவல் வெளியானதும் இலங்கை அரசின் செய்தி தொடர்பாளர்கள் இந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளனர்.
ராணுவத்தை தூண்டிவிட்டு, கலகம் செய்து, அதன் மூலம் தனது ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள ராஜபக்சே தீட்டிய சதி திட்டம் பற்றி விசாரிப்பதே இந்த புதிய அரசின் முதல் வேலையாக இருக்கும் என்று அரசின் செய்தி தொடர்பாளர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதிகார மாற்றத்துக்கு ராஜபக்சே வெகு எளிதில் ஒப்புக் கொண்டதாக மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், இந்த ஆட்சி மாற்றம் அவ்வளவு எளிதில் நடந்து விடவில்லை. ராஜபக்சேவின் சதி திட்டத்துக்கு ராணுவ தளபதி மறுத்து விட்டார். சட்டத்தை மீறி தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்து விட்ட பின்னரே, பதவியை விட்டு ராஜபக்சே இறங்கிச் சென்றார்.
ராணுவ தளபதி, போலீஸ் ஐ.ஜி., மற்றும் தேர்தல் கமிஷனர் ஆகியோரின் நேர்மையை நாங்கள் பாராட்டுகிறோம். ஜனநாயக மரபுகளை உயர்த்திப் பிடித்து, நியாயமான-அமைதியான தேர்தல் நடைபெற உறுதுணையாக இவர்கள் இருந்துள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.