உரிமைப்போரின் வடுக்களை சுமக்காதவர்கள் அப்படியும் இப்படியும் வழிப்போக்கர்களாக இத் தமிழ் தேசியத்தில் நுழைந்த வட கிழக்கை தளமாக கொள்ளாதவர்கள் கையில் இத் தமிழ் தேசியம் சிறை வைக்கப்பட்டமை நமது போராட்ட வரலாற்றில் துர்ப்பாக்கிய நிகழ்வாகும்.என தமிழரசுக்கட்சியின் சிரேஸ்ட துணைத்தலைவரும் பேராசிரியருமான சி. க. சிற்றம்பலம் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தமிழ் தேசியக்கூட்டமைப்பை ஒரு கட்சியாக பதிவு செய்வதில் ஈடுபாடு காட்டும் முன்னாள் போராளிக்குழுவின் தலைவரும் புலம்பெயர் அமைப்புக்களும் பலமுறை இது பற்றி இலங்கை தமிழரசுக்கட்சியிடம் வேண்டுகோள் விடுத்தும் இன விடுதலைக்காக 1949 இல் உருவாக்கப்பட்ட இலங்கை தமிழரசுக்கட்சி இவ் விடயத்தில் அக்கறை காட்டவில்லை என்பதை யாவரும் அறிந்ததே.
இப் பதிவுக்கு எதிராக பகிரங்கமாக மத்திய செயற்குழுவிலும் வெளியிலும் மிக காத்திரமான முறையில் பேசியும் எழுதியும் வந்தவர்களில் நானும் ஒருவனாவேன். அதற்கு காரணம் இத்தகைய பதிவு ஒப்பேறினால் தமிழ் தேசியம் என்ற வேள்விக்கு தம்மை ஆகுதியாக்கிய நமது தலைவர்களின் அர்ப்பணிப்பு மிக்க தியாக வரலாறே மழுங்கடிக்கப்பட்டுவிடும் என்பதனாலேயே ஆகும்.
இவ்வாறு தியாகத்தில் வளர்ந்த தமிழ் தேசியம் அண்மைக்காலங்களில் வழி தவறி நெறி தவறி செல்வதை இக் காலகட்டத்தில் எம்மால் அவதானிக்க முடிகின்றது. தமிழ் தேசியம் நடந்து வந்த பாதை பற்றி அறியாவர்கள் உரிமைப்போரின் வடுக்களை சுமக்காதவர்கள் அப்படியும் இப்படியும் வழிப்போக்கர்களாக இத் தேசியத்தில் நுழைந்த வட கிழக்கை தளமாக கொள்ளாதவர்கள் கையில் இத் தேசியம் சிறை வைக்கப்பட்டமை நமது போராட்ட வரலாற்றில் துர்ப்பாக்கிய நிகழ்வாகும்.
இதனால் இவ் வழிப்போக்கர்கள் கையில் சிக்கியுள்ள இத் தேசியம் விரைவாக அழிவை நோக்கி செல்வதால் எம்மவர் எந் நோக்கத்திற்காக கைப்பிடித்தார்களோ அந் நோக்கமும்; சிதறடிக்கப்பட்டுவிடும் என அங்கலாய்ப்பும் எம்மை வாட்டுகின்றது.
இதனால் தமிழ் தேசியத்திற்கு விசுவாசத்துடனும் அர்ப்பணிப்புடனும் தமிழ் தேசியத்தை தூய்மைப்படுத்தி பங்காற்றும் அனைவரையும் இணைத்து நமது உரிமை போரை முன்னெடுக்கும் பாரிய பொறுப்பு தமிழ் உணர்வாளர்களுக்கு உண்டு.
இத்தகைய வரலாற்றுக்கடமையை முதன்மையான வலுவான நிலையில் வடக்கு கிழக்கு மக்களின் உரிமைக்குரலாக வீறுநடை போட்ட தமிழரசுக்கட்சி பல சந்தர்ப்பங்களில் தமிழ் தேசிய விசுவாசிகளையும் இதற்காக இணைத்ததும் வரலாறாகும்.
1972 இல் உருவாகிய தமிழர் கூட்டணியும் 1976 அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இலங்கை தோட்டத்தொழிலாளர் அமைப்பும் உருவாக்கிய தமிழர் விடுதலைக்கூட்டணியும் இதற்கு நல்ல உதாரணமாகும்.
விடுதலைப்புலிகளை இலங்கை தமிழரசுகட்சியோடு ஏனைய அமைப்புக்களையும் 2001 இல் இணைத்து இன்றைய தமிழ் தேசியக்கூட்டமைப்பை உருவாக்கினர். இக் கூட்டமைப்பின் பின் தேர்தல் சின்னமாக வீடே அமைந்தது.
இதனால் உரிமைப்போரை முன்னெடுத்து செல்லும் இவ் அமைப்பு வெறும் தேர்தல் கூட்டமைப்பாக இயங்குகிறதே தவிர ஒரு வலுவான கட்டமைப்புடன் செயற்படாதது மிகப்பெரிய குறையே. எமது போராளிகளுக்கும் மக்களும் செய்த தியாகத்தால் எமது பிரச்சனை இன்று சர்வதேச பிரச்சனையாகிய கால கட்டத்தில் ஒரு வலுவாக கட்டமைப்பு காலத்தின் தேவையாகும்.
இவ்வாறு இயங்கி வெளிப்படையாக எமது உரிமை பற்றி பேசி மக்களுக்கும் அறிவூட்டினால்தான் இலங்கையின் இராஜதந்திரத்தில் மயங்கி நிலைகெட்டு அறைகுறை தீர்வுக்கு செல்லாது ஒரு நீடித்து நிலைக்ககூடிய தீர்வை நோக்கி நாம் பயணிக்க முடியும்.
இவ்வாறு செயற்படுவது தான் இறுதியாக முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்ட எமது மக்களின் தியாகத்திற்கு நாம் செய்யும் நன்றிக்கடனாகும்.
அதனால் தேர்தலுக்கு முன் புலம்பெயர் அமைப்புக்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் இணைந்து சுமூகமாக கலந்துரையாடி தமிழ் தேசியக்கூட்டமைப்பை கட்சியாக பதிவு செய்வது காலத்தின் கட்டாயமாகும். இத்தகைய முயற்சியே தமிழ் மக்களின் விடுதலையை விரைவுபடுத்தும் என தெரிவித்துள்ளார்.