”இலங்கை இனப்படுகொலை குறித்த சர்வதேச விசாரணை கோரி, வடக்கு மாகாண அரசு நிறைவேற்றியுள்ள தீர்மானம், நாட்டின் பாதுகாப்பிற்கே அச்சுறுத்தலானது,” என, எதிர்க்கட்சியான, இலங்கை சுதந்திர கட்சி தலைவர் நிமல் சிரிபால டி சில்வா எச்சரித்துள்ளார்.
இலங்கை வடக்கு மாகாண அரசு, உள்நாட்டு போரில் நடைபெற்ற தமிழினப் படுகொலை குறித்து, ஐ.நா., மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இதை கண்டித்து, சில்வா மேலும் கூறியதாவது:
விடுதலைப் புலி ஆதரவாளர்களின் தூண்டுதல் பேரில், இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுபோன்ற செயல்களில் மாகாண அரசுகள் ஈடுபட்டால், அவற்றின் நடவடிக்கைகளை நாங்கள் உன்னிப்பாக ஆராய்வோம். இலங்கை அரசு, இந்த தீர்மானம் ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்துள்ளதால், சமரச தீர்வு காண விரும்பும், அதிபர் சிறிசேனவுக்கும், இந்த தீர்மானம் வருத்தம் அளிக்கும். உடனடியாக இத்தீர்மானத்தை திரும்பப் பெற வேண்டும். இம்மாதம், இலங்கையின் 67வது சுதந்திர தின விழாவில், தமிழ் தேசிய கூட்டணி தலைவர்கள் பங்கேற்றது, சமரச தீர்வுக்கான விடியலாக பார்க்கப்படுகிறது. அந்த முயற்சியை தடுக்கும் வகையில், தீர்மானம் உள்ளது. இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.