அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இல்லாமல் சட்ட விரோதமாக குடியிருக்கும் 4½ லட்சம் இந்தியர்கள் உள்பட ஒரு கோடியே 10 லட்சம் வெளிநாட்டினரை அங்கிருந்து வெளியேற்றும் நிலை உருவானது. ஆனால் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, அங்கு சட்ட விரோதமாக குடியேறியவர்களில் 47 லட்சம் பேருக்கு சலுகை காட்டும் விதமாக, சட்டப்பூர்வ அந்தஸ்து வழங்கி கடந்த நவம்பர் மாதம் ஒரு அதிரடி உத்தரவு பிறப்பித்தார். அமெரிக்க பாராளுமன்றத்தின் விருப்பத்துக்கு மாறாக அமைந்த இந்த உத்தரவு, பழமைவாதிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
ஒபாமாவின் அதிரடி உத்தரவின் மூலம், அமெரிக்காவில் வந்து குடியுரிமை பெற்றவர்களின் பெற்றோர்கள், சட்டப்படி நிரந்தரமாக தங்குகிற உரிமை பெற்றவர்களின் பெற்றோர்கள், சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படமாட்டார்கள். அவர்கள் தற்காலிகமாக அமெரிக்காவில் வசிப்பதை தொடரலாம். அமெரிக்காவில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் வந்து குடியேறியவர்களுக்கு இந்த விதிமுறைகள் பொருந்தும் என தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் ஒபாமாவின் உத்தரவை எதிர்த்து அமெரிக்காவில் 26 மாகாணங்கள் ஒன்று திரண்டு, டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பெடரல் கோர்ட்டில் வழக்கு தொடுத்தன. இந்த வழக்கை நீதிபதி ஆண்ட்ரூ ஹேனன் விசாரித்தார்.
இதையடுத்து ஜனாதிபதி ஒபாமாவின் உத்தரவை நிறைவேற்றுவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என கூறி நீதிபதி ஆண்ட்ரூ ஹேனன் நேற்று முன்தினம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தார்.