குதிரை மீதேறி பண்டார வன்னியனும் முத்துப்பல்லக்கில் குருவிச்சை நாச்சியாரும் ஒட்டிசுட்டான் நெடுஞ்சாலையில் வீதியுலா சென்றனர். பண்டாரவன்னியன் இராசதானியில் மீண்டும் ஒரு சம்பவம்!
இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட ஒட்டிசுட்டான் பிரதேச கலாச்சார விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழர் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் மக்கள் பேரணி இடம்பெற்றது. இப்பேரணியிலேயே மேல்கூறிய சம்பவம் இடம்பெற்றது. ஒட்டிசுட்டான் பிரதேச பண்பாட்டுப் பேரவை நடாத்திய இப்பெரு விழாவில் மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, வட மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன், பிரதி அவைத்தலைவர் பா.கமலேஸ்வன், ஒட்டிசுட்டான் கால்நடை வைத்திய அதிகாரி ஜெகதீபன், கமநல சேவைகள் உதவி ஆணையாளர் ஆயகுலன் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொண்டனர். ஓட்டுசுட்டான் பிரதேச செயலாளர் அநிருத்தனன் தலைமையில் நடைபெற்ற இவ் விழாவை கலாச்சார உத்தியோகத்தர் மோகன் நெறிப்படுத்தியுள்ளார்.
நீர்பாசன சந்தியில் ஆரம்பித்த ஊர்தி ஊர்வலம் பிரதேச செயலகம் சென்று முடிவடைந்தது. பின்னர் பிரதேச செயலக மகாநாட்டு மண்டபத்தில் கலை நிகழ்வுகள் நடைபெற்றன.
நிகழ்வில் “முத்தெழில்” என்னும் சஞ்சிகை வெளியிடப்பட்டது. மாவட்ட செயலாளர் வெளியிட்டு வைக்க பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா அவர்கள் பெற்றுக்கொண்டார்.
இவ் விழாவின் சிறப்பம்சமாக இப்பிரதேசத்தின் துறைசார் சாதனையாளர்களுக்கு “பண்டார வன்னியன்” விருது வழங்கிக் கவுரவிக்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
-வன்னிச் செய்தித் தொடர்பாளர்-