இம்மாதம் 28 ஆம் திகதி புதன்கிழமை நெதர்லாந்து நாட்டில் மார்கழிப்பூக்கள் 2016 நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடந்தேறியது. பரந்தன் பிரதேச மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக நெதர்லாந்தில் இரண்டாவது முறையாக “மார்கழிப்பூக்கள்” அரங்காடல் நடைபெற்றுள்ளது.
நெதர்லாந்து மண்ணில் கலை இலக்கியப்பணி செய்பவரும் நாடகரும், பரந்தன் இந்து மகாவித்தியாலய சர்வதேச ஒன்றிய நெதர்லாந்து நாட்டின் இணைப்பாளருமான சார்ள்ஸ் குணநாயகம் அவர்களுடைய நெறிப்படுத்தலில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இளையோரின் பல்வேறு நிகழ்வுகள் வியப்பூட்டும் வகையில் அமைந்தமை புலம்பெயர் தேசங்களில் எம்மவர் திறமையை வெளிப்படுத்தியது. பாடசாலையின் முன்னாள் ஆசிரியை சிவாஜினி ஜெயக்குமார் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டிருந்தார்.
இந்த நிகழ்வினை அழகுற தொகுத்து வழங்கியிருந்தார்கள் பரந்தன் இந்து மகாவித்தியாலய சர்வதேச ஒன்றிய ஜேர்மனி நாட்டின் இணைப்பாளரரும் அறிவிப்பாளருமான செல்வராசா செல்வமணிக்கம் மற்றும் யாழினி விதுரன் ஆகியோர்.
இந்நிகழ்வுக்கு பரந்தன் பாடசாலை பழைய மாணவர்கள் மற்றும் ஒன்றியப் பிரதிநிதிகள் எனப் பல்வேறு நாடுகளிலும் இருந்து பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.