விடுதலைப் புலிகள் கொல்லப்பட்ட நாள் தன் வாழ்வில் மகிழ்ச்சியான நாள் என்று தாம் ஒருபோதும் கூறவில்லை என்று தெரிவித்துள்ளார் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன். நாட்டை பாதுகாக்கும் ஒருவரையே தாம் தேர்தலில் ஆதரிப்பதாகவும் தெரிவித்தார்.
கோத்தபாய ராஜபக்சவின் தேர்தல் ஆதரவு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முத்தையா முரளிதரன் கூறிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளன. மக்களை படுகொலை செய்த, விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்ட நாளே தனது வாழ்வில் மகிழ்ச்சியான நாள் என்று கூறியதாக ஊடங்கள் குறிப்பிட்டன.
இந்த விடயங்கள் உலகம் எங்கும் வாழும் மக்களிடையே பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த முரளி, அவ்வாறு தாம் கூறவில்லை என்று மறுப்பு வெளியிட்டுள்ளார். 2009இற்குப் பின்னர் அச்சமற்ற சூழல் காணப்பட்டதாகவும் 2019 ஏப்ரல் தாக்குதலுடன் பழைய நிலமை தோன்றியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இவைகளை தவிர்க்க, பாதுகாப்பை உறுதிப்படுத்துபவருக்கே தனது ஆதரவு என்று மீண்டும் கோத்தபாயவுக்கு ஆதரவு சமிக்ஞையை வெளிப்படுத்தியுள்ளார். இதேவேளை மீண்டும் சர்ச்சையான மற்றொரு கருத்தை வெளியிட்டார் முரளி. அதாவது, இனவாத, மதவாத கட்சிகளை நாட்டில் இல்லாமல் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் இல்லாவிட்டால், நாடு நன்றாக இருக்கும் என்றும் முரளிதரன் கூறியுள்ளார்.
வணக்கம் லண்டனுக்காக பூங்குன்றன்