முன்னாள் துணைவேந்தர் சண்முகலிங்கன் புகழாரம்
ஈழத்து புலமைப் பாரம்பரியத்தின் உன்னத அடையாளம் பேராசிரியர் பொன் . பூலோகசிங்கம்’ இவ்வாறு முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் என் சண்முகலிங்கன் புகழாரம் சூட்டியுள்ளார்.
தமிழ்ப் பேராசிரியர் பொன். பூலோகசிங்கத்தின் மறைவு தொடர்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் என் சண்முகலிங்கன் வெளியிட்டுள்ள புகழஞ்சலிக் குறிப்பு இது.
ஈழத்தின் தனித்துவ புலமையாளரான தமிழ்ப் பேராசிரியர் பொன். பூலோகசிங்கம் அவர்கள் தம் 83 வது அகவையில் இன்று சிட்னியில் காலமான செய்தி எழுதும் துயரம் கனமானது.
சிறந்த பேராசிரியர்,ஆய்வாளர்,பதிப்பாசிரியர் என தமிழியல் உலகில் தடம் பதித்த பேராசிரியரின் வாழ்வும் படைப்புகளும் ஈழத்து புலமைப் பாரம்பரியத்தின் உன்னத அடையாளம் எனலாம்.
வவுனியா செட்டிக்குளத்தில் 1936 ல் பிறந்த பேராசிரியர் அவர்களின் கலாநிதிப்பட்ட ஆய்வு, 1963-1965 காலப்பகுதியில் ஒக்ஸ்போட் பல்கலைக்கழக திராவிட மொழியியலறிஞர் பேராசிரியர் தோமஸ் பரோவின் வழிகாட்டலில் அமைந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் இலக்கியத்தில் ஈழத்தமிழறிஞரின் பெருமுயற்சிகள், ஈழம் தந்த நாவலர் இந்துக் கலைக்களஞ்சியம் , நாவலர் பண்பாடு, சிலப்பதிகார யாத்திரை என பல நூல்களை தமிழுக்காக்கியவர். நூற்றுக்கு மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை எமதாக்கியவர்.
ஈழத்து தமிழிலக்கிய வரலாற்றினை ஆழ ஆய்ந்து பதிவாக்கிய அதேவேளையில் இலக்கியத்தின் வழியான தமிழர் பண்பாட்டு வரலாற்றினையும் பல்துறை இணைநோக்கில் நுண் ஆய்வுக்குட்படுத்தியவர். இந்த வகையில் கோணேசர் கல்வெட்டு, முருகவழிபாட்டின் தோற்றமும் வளர்ச்சியும் ,வன்னி நாட்டின் வரலாறு பற்றிய அவரது ஆய்வுகள் குறிப்பிடத்தக்கன. களனிப்பல்கலைக்கழகம், பேராதனைப் பல்கலைக்கழகம்,கொழும்புப்பல்கலைகழகம் ஆகியவற்றில் பேராசிரியராக விளங்கிய அவர், 1997 இல் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்தார். அங்கும் நிறைவான கல்விப்பணிகளை ஆற்றியவர்.
இன்று சிட்னியில் முதியோர் இல்லமொன்றில் அவரது வாழ்க்கைப்பயணம் நிறைவு பெற்றாலும் தமிழுள்ளவரை அவர் மேலான வாழ்வின் புலமைச்சுவடுகள் எமக்கெலாம் வழிகாட்டியாகும்.
அவர் ஆத்ம சாந்திக்கான பிரார்தனையில் இணந்திருப்போம் இவ்வாறு பேராசிரியர் என் சண்முகலிங்கன் விடுத்துள்ள குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.