முல்லைத்தீவில் பௌத்த பிக்குகளால் அரங்கேற்றப்பட்டது இனப்படுகொலைக்கான அறிகுறியாகும் என்று வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவில் நடைபெற்ற மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் அவர், ஊடகங்களுக்கு தெரிவித்ததாவது;
நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் தீர்த்தக் கேணிக்கு அருகில், நீதிமன்ற உத்தரவையும் புறந்தள்ளி பௌத்த பிக்குவின் உடல் நேற்று திங்கட்கிழமை தகனம் செய்யப்பட்டமை பேருந்துகளில் கொண்டு வரப்பட்ட சிங்களர்களினால் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் முன்னிலையில் சட்டத்தரணிகள் மற்றும் பொதுமக்கள் தாக்கப்பட்டமை ஆகியன எதிர்காலத்தில் வடக்கு கிழக்கில் மீண்டும் தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெறக்கூடிய “இனப்படுகொலை” க்கான ஒரு அறிகுறி என்பதை சர்வதேச சமூகம் புரிந்துகொள்ளவேண்டும்.
முல்லைத்தீவு – பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தை ஆக்கிரமித்து விகாரை அமைத்துத் தங்கியிருந்த கொலம்ப மேதாலங்க தேரரின் இறுதி நிகழ்வுகள் ஏற்கனவே பெரும் பதற்றத்தை இந்தப் பகுதியில் ஏற்படுத்தி இருந்த நிலையில், சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கான போதிய கால அவகாசம் அரசுக்கு இருந்தது.
வடமாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பி நிலமையை விபரித்து சட்ட ஒழுங்குகளுக்குப் பங்கம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுமாறு கேட்டிருந்தேன்.
ஆனாலும் ஒரு அரசியல் கட்சி பேருந்து வண்டிகளில் நாலாபுறத்திலிருந்தும் சிங்களவர்களைக் கொண்டுவந்து அட்டூழியத்தில் ஈடுபடுவதற்கும் தனது நூற்றுக்கணக்கான படையினர் பார்த்துக்கொண்டு எந்த நடவடிக்கைகளையும் எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதற்கும் மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்ட ஒழுங்கைக் காப்பாற்ற உரிய நடவடிக்கைகளை எடுக்காமல் இருப்பதற்கும் அரசு அனுமதித்தமை வெறும் தற்செயலான ஒரு நிகழ்வு அல்ல.
இவை யாவும் மேலிட அனுசரணைகளுடன் தான் நடைபெற்றுள்ளன.
இலங்கை ஒரு தோல்வி அடைந்த நாடு என்பதையும், தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிராக அதிகரித்துவரும் ‘இனக் குரோதம்’ காரணமாக எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எந்த இனப்படுகொலை சம்பவங்களையும் தடுத்து நிறுத்தக்கூடிய நிலையில் இலங்கையின் அரசோ அல்லது அதன் பாதுகாப்பு நிர்வாகக் கட்டமைப்புக்களோ இல்லை என்பதை ஐக்கிய நாடுகள் மற்றும் சர்வதேச சமூகம் புரிந்துகொண்டு உடனடியான தலையீடு ஒன்றை மேற்கொள்ளவேண்டும்.
தமிழ் மக்கள் தமது வடக்கு கிழக்கு தாயகத்தில் சுய நிர்ணய உரிமைகளுடன் வாழ்வதற்கான ஏற்பாடு ஒன்றை இந்தியா மற்றும் சர்வதேச சமூகம் காலதாமதம் இன்றி செய்வதற்கான தருணம் வந்துவிட்டது என்பதை நேற்று முல்லைத்தீவில் நடைபெற்ற நிகழ்வு எடுத்துக் காட்டுகின்றது.
கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன பலன்? இதனை முன்னர் இலங்கையில் சமாதான நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஐ. நா இணைத்தலைமை நாடுகள், இந்தியா மற்றும் ஏனைய நாடுகளுக்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
இதேவேளை, முல்லைத்தீவில் நேற்று நடைபெற்ற சம்பவம் ஒட்டுமொத்த தமிழ் மக்கள் மத்தியிலும் ஆறாத காயம் ஒன்றை ஏற்படுத்திவிட்டது. நேற்று நடைபெற்ற சம்பவங்களுக்கு காரணமானவர்கள் உடனடியாக கைதுசெய்யப்பட்டு சட்டத்தின் முன்பாக நிறுத்தப்படவேண்டும். இல்லையென்றால், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தகுந்த பாடம் ஒன்றை வழங்குவதற்கு தமிழ் மக்கள் தருணம் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
அரசியலமைப்பில் பௌத்தத்திற்கு முதலிடம் கொடுத்தமை பிழையென்று 1978ம் ஆண்டு அரசியலமைப்பு தயாரிக்கப்படும் போது சட்டத்தரணியாகவும் அண்மையில் வடமாகாண முதலமைச்சர் என்ற முறையில் புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்படும் போதுஞ் சுட்டிக் காட்டியிருந்தேன்.
சிறு விடயங்களைப் பொருட்படுத்தத் தேவையில்லை என்று மெத்தப்படித்தவர்கள் சிலர் சீறினார்கள். நேற்று ஒரு புத்த பிக்கு இந் நாட்டில் பௌத்தத்திற்கே முதலிடம் சட்ட மன்றங்களுக்கு அல்ல என்று தனது வியாக்கியானத்தைத் தந்துள்ளார்.
இவ்வாறான ஏற்பாடுகள் எவ்வாறான எண்ணங்களை எமது பாமர மக்களின் மனங்களில் ஏற்படுத்துகின்றன என்பதை எம்மவர் புரிந்து கொள்ள வேண்டும்.
முல்லைத்தீவில் நேற்று நடைபெற்ற அட்டூழியத்துக்கு எதிராக மிகவும் குறுகிய கால அவகாசத்தில் மக்கள் போராட்டம் ஒன்றை வெற்றிகரமாக ஒழுங்குசெய்த தமிழர் மரபுரிமை பேரவைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
சட்டத்தரணிகளை ஒன்று சேர்த்து நீதிமன்றின் முன் பதாகைகளைப் பிடித்துக் கொண்டு தமது எண்ணங்களை வெளிப்படுத்திய சட்டத்தரணிகளுக்கும் எமது நன்றிகள் உரித்தாகுக – என்றுள்ளது.